தமிழகத்தின் முன்னாள் கவர்னரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான  ரோசய்யா உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள வெமுரு கிராமத்தில்  1993 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி பிறந்த் கொனிஜெட்டி  ரோசய்யா,  குண்டூர் இந்துக் கல்லூரியில் வணிகவியல் பயின்றார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரோசய்ய ஆந்திரா மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக விளங்கினார். 

இதனால் ரோசய்யா கடந்த 1968 ஆம் ஆண்டு முதல் முக்கிய பதவிகளை வகித்துள்ளார். 1978, 1983ஆம் ஆண்டுகளில் சட்டசபை எதிர்கட்சித் தலைவராக பதவி வகித்துள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 1968, 1974 மற்றும் 1980 -ஆம் ஆண்டுகளில் சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆந்திரா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆளும் கட்சியாக இருந்த போது முதன்முறையாக மரி சென்னாரெட்டி அமைச்சரவையில் சாலை, மற்றும் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தார்.

அதன்பிறகு பல காங்கிரஸ் முதல்வர்களின் அமைச்சகங்களில் கட்டிட வசதி, உள்துறை, மின்சாரத்துறை, கைத்தறித்துறை, மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை உள்ளிட்ட முக்கிய இலாக்களில் அமைச்சராக பதவி வகித்துள்ளார்.

rosaiah

கடந்த 2004-09 ஆம் ஆண்டு சிராலா சட்டமன்றத் தொகுதியிலிருந்து 12-வது சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரோசய்யா, 2009 தேர்தலுக்கு முன், நேரடித் தேர்தலில் போட்டியிடாமல் சட்ட மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

ஆந்திரா மாநில முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி விபத்தில் மரணமடைந்த பின்னர், கடந்த 2009 முதல் 2010ஆம் ஆண்டு வரை முதல்வராக பதவி வகித்தார். ஆந்திரா மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

மேலும் 2014 ஆம் ஆண்டில் கர்நாடக பொறுப்பு கவர்னராகவும் செயல்பட்டுள்ளார்.  கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது தமிழக ஆளுநராக ரோசய்யா நியமனம் செய்யப்பட்டார். 

rosaiah reath

தமிழகத்தின் கவர்னர் பதவியில் இருந்து 2016-ல் ஓய்வு பெற்றதை அடுத்து அரசியல் களத்தில் இருந்து விலகி ஆந்திராவில் உள்ள தனது குடும்பத்தினருடன் ரோசய்யா வாழ்ந்து வந்தார். 

இந்நிலையில் ஹைதரபாத்தில் ஓய்வெடுத்து வந்த ரோசய்யாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்படவே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும் வயது முதிர்வு காரணமாக சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

ரோசய்யாவிற்கு 88 வயதாகிறது. அவருக்கு சிவலட்சுமி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். ரோசய்யா மறைவிற்கு ராகுல்காந்தி உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ரோசய்யாவின் மறைவுக்கு தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழகத்தின் முன்னாள் ஆளுநராகவும், ஆந்திராவின் முன்னாள் முதல்வராகவும் மிகச் சிறப்பாக செயலாற்றிய திரு. ரோசய்யா அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

மிக உயரிய பதவியில் இருந்தாலும் மக்கள் மிக எளிதாக அணுகக்கூடிய தலைவராக திகழ்ந்தவர், அரை நூற்றாண்டு காலமாக தொடர்ந்து தென்னிந்திய அரசியலில் பயணித்தவர்,ஆந்திராவில் மிக அதிகமான நாட்கள் அமைச்சராக பதவி வகித்து சரித்திர சாதனை புரிந்தவர். அவரது இழப்பு மக்களுக்கு பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.