ஒமிக்ரான் வைரஸ் மற்ற வைரசுடன் ஒப்பிடும் போது 5 மடங்கு வேகமாக பரவும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பலமுறை உருமாற்றம் அடைந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே ஆல்ஃபா, டெல்டா, காமா, பீட்டா என உருமாற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், புதிதாக ஒமிக்ரான் கொரோனா வைரஸ் உருமாற்றம் கண்டுபிடிக்கப்பட்டது.

தென் ஆப்பிரிக்காவில்தான் கடந்த 24-ம் தேதி முதல்முறையாக ஒமிக்ரான் வகை வைரஸ் உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்டது. அதன்பின் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல், பிரி்ட்டன், நெதர்லாந்து, செக்குடியரசு உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டது.

இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும், அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

OMICRON NEW VARIANT INDIA

தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டவுடன் அந்நாட்டிலிருந்து வருவோருக்கு பயணக் கட்டுப்பாடுகளை பல்வேறு நாடுகளும் விதிக்கத் தொடங்கின. இந்தியாவிலும் எச்சரிக்கைப் பட்டியல் என அழைக்கப்படும் ஒமிக்ரான் பாதிப்பு நாடுகளில் இருந்து வருவோருக்கு கடும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்தது. 

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாய பி.சி.ஆர். பரிசோதனை. அதில் நெகட்டிவ் வந்தால், வீட்டில் 7 நாட்கள் தனிமைக்குப்பின் 8-வது நாள் பிசிஆர் பரிசோதனை. அதிலும் நெகட்டிவ் வர வேண்டும் என கட்டுப்பாடுகளை விதித்தது.

ஒமிக்ரான் பாதிப்பு நாடுகளில் இருந்து டெல்லிக்கு வந்த 6 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு முடிவுக்காக அதிகாரிகள் காத்திருக்கிறார்கள். அதற்குள் கர்நாடகாவில் இருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஒமிக்ரான் வைரஸ் 23 நாடுகளுக்கு பரவிவிட்டதாகவும், மேலும் பரவல் அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இதற்கிடையே அமெரிக்காவிலும் ஒமிக்ரான் புகுந்துவிட்டது. அங்கும் முதல் நபர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் டெல்டா வைரஸின் பாதிப்பு குறைந்துவந்த நிலையில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் இன்று அளித்த பேட்டியில்,  “கர்நாடகாவில் இருவருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஒருவருக்கு வயது 66. மற்றொருவருக்கு 46 ஆகிறது. இருவருக்குமே லேசான அறிகுறிகள்தான் காணப்படுகிறது.

LAV AGARWAL OMICRON NEW VARIANT

இவர்களுடன் தொடர்பில் இருந்த முதல்நிலை தொடர்பாளர்கள், 2-ம் நிலை தொடர்பாளர்கள் கண்டறியப்பட்டு அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இருவருக்கும் இந்தியாவின் இன்சாக்கோ எனப்படும் சார்ஸ் மரபணு பரிசோதனை ஆய்வகத்தின் மூலம் நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒமிக்ரான் கண்டறியப்பட்டது.

பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாகப் பின்பற்றி வந்தாலே போதுமானது. கூட்டாகச் செல்வதையும், கூட்டமான இடங்களுக்குச் செல்வதையும் தவிர்த்துவிடுங்கள்.

இதற்கு முன் அறியப்பட்ட கொரோனா வைரஸ்களைவிட 5 மடங்கு வீரியமானது.  பாதிப்பைத் தரக்கூடிய ஒமிக்ரான் வைரஸ். இதுவரை 29 நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவிவிட்டது. 373 பேர் உலகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.