இந்தியாவில் 2 பேருக்கு ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் முதல்முறையாக இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இங்கிலாந்தில் ஆல்ஃபா, இந்தியாவில் டெல்டா, தென் ஆப்பிரிக்காவில் பீட்டா, பிரேசிலில் காமா என பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது.

இதற்கிடையில் தற்போது கொரோனா வைரஸ் மேலும் உருமாற்றமடைந்துள்ளது. ‘ஒமிக்ரான்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வகை உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. 

OMICRON INDIA REGISTER

இந்த ஒமிக்ரான் வைரஸ் பிற வைரஸ்களை ஒப்பிடும்போது அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 50 பிறழ்வுகளை கொண்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் 25-க்கும் அதிகமான நாடுகளில் அறிவிப்பதற்கு முன்னரே பரவியுள்ளது.

இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 2 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. 

தென் ஆப்பிரிக்காவில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு வந்த 2 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் இன்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுகாதாரத் துறை இணை செயலாளர் லவ் அகர்வால் கூறுகையில் “கர்நாடகா மாநிலத்தில் உள்ள விமான நிலையங்களில் பல்வேறு நாடுகளிலிருந்து வந்த 10 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. அதில் இருவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அது ஒமிக்ரானா என சோதனை செய்த போது அது ஒமிக்ரான் கொரோனா என தெரியவந்தது. அவர்கள் இருவரும் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்கள். ஒருவருக்கு 65 வயது. இன்னொருவருக்கு 45 வயது.

இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் தென்னாப்பிரிக்காவிலிருந்து நேற்று இரவு பெங்களூரு வந்தது தெரியவந்தது. அவர்களுக்கு தீவிர பாதிப்பு இல்லை. பாதிக்கப்பட்ட இருவருடன் தொடர்புடைய நபர்களையும் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒமிக்ரான் தொற்று கண்டுபிடிக்கப்பட்டதை அறிந்து மக்கள் பீதியடைய வேண்டாம். விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்த புதிய வகை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையில் அவர்களின் விவரங்கள் வெளியிடப்படாது.

INDIA OMICRON REGISTER

கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் கொரோனாவால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை விட அதிகமாக உள்ளது. நாட்டின் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஆக்டிவ் கேஸ்களில் 55 சதவீத கேஸ்கள் இந்த இரு மாநிலங்களை சேர்ந்தவர்களாவர். இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடுவது அதிகரித்து வருகிறது.

நாடு முழுவதும் தடுப்பூசி போடுவதை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஐரோப்பா பகுதிகளில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. உலக கொரோனா கேஸ்களில் 70 சதவீதம் பேர் ஐரோப்ப நாட்டை சேர்ந்தவர்கள்தான். கடந்த நவம்பர் 28ஆம் தேதி ஐரோப்பா நாடுகளில் 2.75 லட்சம் புதிய கேஸ்களும் 31 ஆயிரம் இறப்புகள் ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் போது தென்கிழக்காசிய நாடுகளான இந்தியா உள்பட 12 நாடுகளில் கொரோனாவால் வெறும் 1.2 லட்சம் பேர் மட்டுமே கடந்த வாரம் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உலகளவில் கொரோனா பாதித்த கேஸ்களில் தென்கிழக்காசிய நாடுகளில் பாதிப்பானது வெறும் 3.1 சதவீதமாகும். கொரோனா கேஸ்கள் தென்கிழக்காசிய நாடுகளில் குறைந்து வருகிறது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.