“ராம ஜென்ம பூமியை தொடர்ந்து, பாஜக வின் செயல் திட்டத்தில் மதுரா இடம் பெற்று இருப்பதாக” உத்தரப் பிரதேச மாநில துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா தெரிவித்து உள்ளார்.

பாஜகவின் அரசியல் கொள்கையில் மிக முக்கியமானது ராம ஜென்ம பூமியாகும்.

அதாவது,  இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பைசாபாத் மாவட்டத்தின் அயோத்தியில் ராமர் பிறந்தார். இப்பகுதியே, ராம ஜென்ம பூமி என்று அழைக்கப்படுகிறது.

ஆனால், பிற்காலத்தில் அங்கு பாபர் மசூதி வந்ததாக கூறி, அதனை இந்துக்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு இடித்து தள்ளியதால், மிகப் பெரிய சர்ச்சைகள் வெடித்து, நீண்ட இழுப்பறிக்கு பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு பாபர் மசூதி வழக்கு முடிவுக்கு வந்தது.

அதன் படி, “சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டிக்கொள்ளலாம் என்றும், அதற்கான அமைப்பை 3 மாதங்களுக்கு உருவாக்க வேண்டும்’’ என்றும், உச்ச நீதிமன்றம் அப்போது உத்தரவிட்டிருந்தது.

அதாவது, ராமல் கோயில் கட்டுவதை பாஜக கடந்த பல ஆண்டுகளாக தனது கையில் எடுத்திருந்த நிலையில், அதனை அரசியல் கொள்கையாகவே பாஜக வைத்திருந்ததாகவும் கூறப்பட்டது. அத்துடன், இந்த வழக்கில் வெற்றியும் பெற்றது.

அதன் படி, குறிப்பிட்ட அந்த இடத்தில் தற்போது ராமர் கோயில் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது.

அது போல், உத்தரப் பிரதேசத்தில் உள்ள மதுராவில் கிருஷ்ணர் பிறந்த இடமான கிருஷ்ண ஜென்மபூமி மீது, பாஜக தற்போது குறி வைத்து உள்ளது. 

அதுவும், இந்த கிருஷ்ண ஜென்மபூமி அருகே மசூதிகள் அமைந்து உள்ளன. “அந்த மசூதி நிலம், இந்துக்களுக்கு சொந்தமானது என்று உரிமை கொண்டாடி, பல்வேறு இந்து அமைப்புகள் ஏற்கனவே மனு” அளித்து உள்ளன.

இந்த நிலையில், “ராம ஜென்ம பூமியை தொடர்ந்து, பாஜகவின் செயல் திட்டத்தில் மதுராவும் தற்போது இடம் பெற்று இருப்பதாக” உத்தரப் பிரதேச மாநில துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா தற்போது தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்தில், “அயோத்தியில் பிரமாண்ட கோயில் கட்டப்படும் நிலையில், அடுத்த நடவடிக்கை, மதுராதான்” என்று, குறிப்பிட்டு உள்ளார். 

“ராமர் புகழ் வாழ்க. ஜெய் ஸ்ரீ ராதே கிருஷ்ணா” என்றும், தனது டிவிட்டர் பதிவில் அவர் பதிவிட்டு உள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில், அவரது கருத்து இந்த மாநிலத்தில் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அதே போல், “காசியில் காசி விஸ்வநாதர் கோயில், மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி ஆகிய இடங்களில் மசூதிகள் கட்டப்பட்டிருக்கின்றன என்றும், அவற்றை முழுமையாக உரிமை கோருவது தங்களின் அடுத்து பணி” என்றும், ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த் ஷேத்ரா மற்றும் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி நியாஸ் ஆகியவற்றின் தலைவரான மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.