வரும் சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க.வை வெற்றி பெற வைத்தால், தரமான மது பாட்டில் 50 ரூபாய்க்கு விற்கப்படும் என்று ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவர் சோமு வீரராஜு அறிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

வட மாநிலங்களில் தேசியக் கட்சியான பா.ஜ.க. பெருவாரியான மாநிலங்களில் ஆட்சியை பிடித்திருந்தாலும், தென்னிந்தியாவில் கர்நாடக மாநிலத்தை தவிர மற்ற மாநிலங்களில் கட்சியை வளர்க்கவும், ஆட்சியை பிடிக்கவும் திணறி வருகிறது.

ஆந்திர மாநிலத்தில் வரும் 2024 ஆம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அம்மாநிலத்தில் ஆட்சியை பிடித்தே தீருவது என பா.ஜ.க. பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசிக் கொண்டு வருகிறது.

andhra pradesh somu veerraju liquorஅந்தவகையில் ஆந்திர மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் 50 ரூபாய்க்கு குவார்ட்டர் பாட்டில் மது வழங்கப்படும் என அம்மாநில பா.ஜ.க. தலைவர் சோமு வீரராஜு பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஆந்திர மாநிலம் அமராவதியில் செவ்வாய்க்கிழமை பா.ஜ.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது . இதில் பா.ஜ.க.  மாநில தலைவர் சோமு வீரராஜு  கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

"ஆந்திராவில் ஏராளமான வளங்கள், நீண்ட கடற்கரைகள் இருக்கின்றன. ஆனால் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசும், இதற்குமுன் ஆட்சி செய்த தெலுங்கு தேசம் கட்சியும் எதுவும் செய்யவில்லை.

மாநில அரசு அதிக விலைக்கு தரமற்ற மதுவை மக்களுக்கு விற்பனை செய்து வருகிறது. போலியான பிராண்டுகளை அதிக விலை வைத்து விற்கின்றனர். அதேசமயம் மக்களுக்கு அறிமுகமான பிராண்டுகள் விற்பனைக்கே வருவதில்லை.

ஆந்திராவில் ஆளுங்கட்சித் தலைவர்கள் பலரும் மது ஆலைகளை நடத்துகின்றனர். இந்த மது ஆலைகளில் தரமற்ற மதுவே தயாரித்து விற்கப்படுகிறது. போலி ஸ்டிக்கர்கள் ஒட்டி மதுபானங்கள் விற்கப்படுகின்றன. மதுவிலக்கு அமலில் இருப்பதாக கூறி மாநில அரசே மதுவை தயாரித்து விற்பனை செய்கிறது.

ஆந்திராவி்ல் ஒரு கோடி பேர் மதுக் குடிக்கிறார்கள். அவர்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். அந்த ஒரு கோடி பேரும் 2024 சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க வேண்டும். அப்படி வாக்களித்தால் நாங்கள் உங்களுக்கு ரூ.75-க்கு மதுவை விற்பனை செய்கிறோம். 

நல்ல வருவாய் கிடைத்தால் நாங்கள் உங்களுக்கு ஒரு பாட்டில் 50 ரூபாய்க்கு கூட கொடுக்கிறோம். நிச்சயமாக மது மோசமானதாக இருக்காது. தரமான மதுவாகத்தான் இருக்கும் என்பதை உறுதியளிக்கிறேன்.

ஆனால் ஆந்திராவில் தற்போது மதுவின் விலை அதிகபட்சமாக இருக்கிறது. ஆந்திராவில் மதுகுடிக்கும் ஒரு நபர் சராசரியாக மாதத்துக்கு ரூ.12,000 செலவு செய்கிறார். இந்த பணத்தை, மக்களிடம் ரத்தத்தை உறிஞ்சுவது போல் வசூலித்து, அதை பணத்தை நல்ல திட்டங்களாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வழங்குகிறார்.

andhra pradesh somu veerraju liquorகடந்த சில நாட்களுக்கு முன் மாநில அரசு மதிப்புக்கூட்டப்பட்ட வரியை ரத்து செய்தது. இருப்பினும் இதன் பலன்கள் மக்களை சென்றடையவில்லை. அதிக விலைக்கே மதுபானங்கள் விற்கப்படுகின்றன. ஏழைகள் மது அருந்துவதை தடுக்க அதிக விலைக்கு மது விற்கப்படுவதாக அரசாங்கம் கூறுகிறது.

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் அமராவதி நகரை தலைநகராக்கி, அடுத்த 3 ஆண்டுகளில் சிறப்பானதாக மாற்றுவோம். இடதுசாரிகள் நாட்டை அழித்துவிட்டார்கள். கம்யூனிஸ்ட் கட்சிகள் அனைத்தும் குரைக்கும் நாய்கள்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், புரந்தேஸ்வரி, மாநிலங்களவை எம்.பி. ஒய்எஸ் சவுத்ரி, எம்சி ரமேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

தற்போது ஆந்திராவில் குவார்ட்டர் மது பாட்டில் ரூ. 200-க்கு விற்கப்படுகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் எத்தனையோ மக்கள் பிரச்சினை இருக்கும் போது மதுபான விலையை மட்டும் குறிவைத்து பா.ஜ.க. களத்தில் இறங்கி இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.