தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர் பிரபல நடிகர் என வலம் வரும் உதயநிதி ஸ்டாலின் தற்போது சட்டமன்ற உறுப்பினராகவும் திகழ்கிறார். முன்னதாக நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னதாக தமிழ் திரையுலகில் கதாநாயகனாக நடித்து வரும் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கும் புதிய திரைப்படம், இயக்குனர் K.S.அதியமான் இயக்கத்தில் உருவாகும் ஏஞ்சல் மற்றும் இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் கண்ணை நம்பாதே உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து தயாராகி வருகின்றன.

இதனிடையே நடிகர், இயக்குனர் & பாடலாசிரியர் என பன்முகத் தன்மை கொண்ட கலைஞராக வலம் வரும் இயக்குனர் அருண்ராஜா காமராஜ்  இயக்கத்தில், பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ஆர்டிகல் 15 படத்தின் தமிழ் ரீமேக்காக தயாராகும் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் உதயநிதி. 

கதாநாயகியாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்க, ஆரி அர்ஜுனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில், திபு நினன் தோமஸ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் ஆரி அர்ஜுனன் தொடங்கியுள்ளதாக டப்பிங் ஸ்டூடியோ புகைப்படங்களை பகிர்ந்து அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.அந்த புகைப்படங்கள் இதோ…