கிட்டத்தட்ட பரிசோதனைக்கு அனுப்பி 20 நாட்களுக்கு பிறகு தற்போது புதுச்சேரியில் இருவருக்கு ஒமிக்ரான் தொற்று உள்ளதாக பெங்களூரில் இருந்து ஆய்வு முடிவுகள் வந்துள்ளதை அடுத்து புதுச்சேரியிலும் ஒமிக்ரான் வைரஸ்  காலடி எடுத்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் பல நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது.  ஒமிக்ரான் அதிவேகமாக பரவக்கூடியது என்பதால் பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ஒமிக்ரான் பரவலை தடுக்க பல்வேறு நாடுகள் சர்வதேச விமான போக்குவரத்தை நிறுத்தின. இருப்பினும், இந்தியா உள்பட 116 நாடுகளில் ஒமிக்ரான் பரவி விட்டது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன. 

puducherry omicron confirmedஇந்தியாவிலும் ஒமிக்ரான் வைரஸ் பரவல்  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று காலை  நிலவரப்படி ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 653 ஆக உயர்ந்துள்ளது.  

இதுவரை 186 பேர்  ஒமிக்ரான் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 167 பேரும், டெல்லியில் 165 பேர் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத் 49, ராஜஸ்தான் 46, தெலுங்கானா 55, கர்நாடகாவில் 31, கேரளாவில் 57 பேர், ஒமிக்ரான் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். 

தமிழ்நாட்டில் 34 பேர் ஒமிக்ரான் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 16 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 18 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மொத்தம் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமிக்ரான் வைரஸ் பரவியுள்ளது. ஒமிக்ரான் அதிக பாதிப்பு நிறைந்த தமிழ்நாடு உள்பட 10 மாநிலங்களுக்கு மத்திய குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

இதையடுத்து அடுத்தடுத்து மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கை பிறப்பித்து வருகின்றன. மக்கள் கூடுவதை தவிர்க்க பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு பல மாநிலங்கள் தடை விதித்துள்ளன. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமலு செய்தியாளர்களிடம் கூறுகையில், "புதுச்சேரியில் நகரப்பகுதியான காமராஜர் சிலையொட்டி உள்ள பகுதியைச் சேர்ந்த 80 வயது முதியவருக்கும், லாஸ்பேட்டையில் 20 வயது பெண்ணுக்கும் ஒமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளதாக பெங்களூரில் இருந்து ஆய்வக அறிக்கை வந்துள்ளது.

puducherry omicron confirmed

டிசம்பர் மாத தொடக்கத்தில் கொரோனா தொற்றுக்காக பரிசோதனைக்கு இவர்கள் வந்தபோது ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்தோம். அதில் குறிப்பிட்ட அறிகுறி உள்ளோரின் ஆய்வறிக்கையை பெங்களூருக்கு அனுப்புவோம். 

அதன்படி தற்போது இருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகி வந்துள்ளது. இதில் முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பினார். அதேபோல் இளம்பெண்ணும் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு குணமடைந்துள்ளார். இருவரும் தற்போது நலமாக இருக்கின்றனர்.

இவர்கள் வெளிநாடு செல்லவில்லை. அவர்களிடம் தொடர்பில் இருந்தோருக்கும் அப்போதே கொரோனா பரிசோதனை செய்து அவர்களுக்கு நெகட்டிவ் முடிவுகள் வந்தன. அதனால் அவர்களுக்கு பாதிப்பு ஏதும் இல்லை. 

டிசம்பரில் இதுவரை ஒமிக்ரான் உள்ளதா என்பதை அறிய 90 பரிசோதனை ஆய்வு அறிக்கைகளை பெங்களூர் அனுப்பியுள்ளோம். இன்னும் பல முடிவுகள் வரவேண்டியுள்ளது. ஊரில் இருந்தோருக்கே ஒமிக்ரான் வந்துள்ளதால், எங்கள் கருத்துப்படி ஒமிக்ரான் நிறைய இருக்க வாய்ப்புள்ளது.

ஒமிக்ரான் தொற்றுக்கு உடல்வலி, சோர்வு ஆகியவைதான் அறிகுறிகளாகும். அவ்வாறு இருந்தால் பரிசோதனை செய்து கொள்ளலாம். இது அதிகம் பாதிப்பு ஏற்படுத்தாது. புத்தாண்டு கொண்டாட்டம் நடத்தலாமா என்பது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசித்து அரசிடம் தெரிவிப்போம்.

ஒமிக்ரான் வார்டு, மார்பக நோய் மருத்துவமனையில் உள்ளது. அங்கு 180 படுக்கைகள் வசதிகள் உள்ளன. மொத்தமாக 600 படுக்கைகள் தயாராக உள்ளன. மருந்துகள், ஆக்சிஜன் வசதியும் தயாராக உள்ளது. முகக் கவசம் அணியாமல் இருக்காதீர்கள். சமூக இடைவெளி கடைபிடியுங்கள். அவசியமின்றி வெளியில் வராதீர்கள்" இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.