தமிழ் திரையுலகின் மிக சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழும் இசையமைப்பாளர் டி.இமான், தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்களுக்கும் இசையமைத்து பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

அஜித்தின் விஸ்வாசம் படத்திற்காக தேசிய விருது பெற்ற டி.இமான் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படத்திற்கு இசையமைத்திருந்தார். தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில், சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

மேலும் நடிகர் ஆர்யாவின் கேப்டன், பிரபுதேவாவின் பொய்க்கால் குதிரை மற்றும் மை டியர் பூதம் உள்ளிட்ட திரைப்படங்கள் டி.இமான் இசையில் அடுத்தடுத்து வெளிவர உள்ளன. இந்நிலையில் இசையமைப்பாளர் டி.இமான் தனது மனைவி மோனிகா ரிச்சர்ட்-ஐ விவாகரத்து செய்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், 

என்னுடைய நல விரும்பிகளுக்கும், இசை ரசிகர்களுக்கும் நான் ஒன்றை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த வாழ்க்கை என்பது பலவிதமான பாதைகளைக் கொண்டது என நாங்கள் புரிந்து கொண்டோம். நானும் என் மனைவி மோனிகா ரிச்சர்டும் சட்டபூர்வமாக கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விவாகரத்து பெற்றுக் கொண்டோம். இனி நாங்கள் இருவரும் கணவன் மனைவி அல்ல. ஊடகங்கள்,ரசிகர்கள் மற்றும்  இசை ஆர்வலர்கள் எங்களின் தனிப்பட்ட முடிவுக்கு மதிப்பளித்து வாழ்வின் அடுத்தக்கட்டத்திற்கு நாங்கள் செல்ல ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் 

என தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் டி.இமானின் இந்த அறிவிப்பு திரை உலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.