ஒரே நாளில் 2 கொரோனா தடுப்பூசிகள் மற்றும் ஒரு ஆன்டி வைரஸ் மாத்திரைக்கு மத்திய அரசின் மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சி.டி.எஸ்.சி.ஓ.) அனுமதி அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் கடந்த 2 வருடங்களாக உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், இந்த வைரஸை  கட்டுப்படுத்த தடுப்பூசிகளே பேராயுதமாக திகழும் என மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர். இதையடுத்து பல்வேறு நாடுகளும் கொரோனா தடுப்பூசியை கண்டறிந்து அதனை மக்களுக்கு செலுத்தி வருகின்றனர். 

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக மருத்துவப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதை அடுத்து, முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

ஐதராபாத் நகரைச் சேர்ந்த பாரத் பயோ டெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியும், பிரிட்டன் நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் கண்டுபிடித்து சீரம் இந்தியா நிறுவனம் தயாரித்து வரும் கோவிஷீல்டு தடுப்பூசியும் பொது மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. 

covid vaccines approval indiaரஷ்ய நாட்டின் ஸ்புட்னிக் வி என்ற தடுப்பூசி ஒருசில தனியார் மருத்துவமனைகளில் போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி பணி வேகமடைய தொடங்கியநிலையில் கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி 100 கோடி தடுப்பூசிகள் என்ற இமாலய இலக்கை இந்தியா எட்டியது. 

தற்போது ஒமிக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், 3-வது அலை உருவாகும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனைத்தொடர்ந்து கொரோனா பரவலை தடுக்க 15 முதல் 18 வயது வரையுள்ள சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 3 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இதற்காக ‘கோவின்’ இணையதளத்தில் சிறுவர்கள் பெயர் பதிவு செய்யும் பணி ஜனவரி 1 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதேபோல் ஜனவரி 10 ஆம் தேதி முதல் முன் எச்சரிக்கை தடுப்பூசி (பூஸ்டர்) செலுத்தும் பணி தொடங்கும் என்றும் முதல்கட்டமாக மருத்துவப்பணியாளர்களுக்கும், முன்களப்பணியாளர்களுக்கும், இணை நோய் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.  

இந்நிலையில் இந்தியாவில் கோர்பிவேக்ஸ், கோவோவேக்ஸ் ஆகிய இரண்டு கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.  மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சி.டி.எஸ்.சி.ஓ.) கொரோனா தடுப்பூசிகளான கோவோவாக்ஸ், கோர்பிவேக்ஸ் மற்றும் வைரஸ் எதிர்ப்பு மருந்தான மோல்னுபிராவிர் போன்றவற்றின் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்துக்கு அனுமதி வழங்கி உள்ளது.

covid vaccines indiaஇது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், “மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சி.டி.எஸ்.சி.ஓ.) கொரோனா தடுப்பூசிகளான கோவோவாக்ஸ், கோர்பிவேக்ஸ் மற்றும் வைரஸ் எதிர்ப்பு மருந்தான மோல்னுபிராவிர் போன்றவற்றின் அவசரகால பயன்பாட்டுக்கு அங்கீகாரத்தை வழங்கி உள்ளது. 

கோர்பிவேக்ஸ் தடுப்பூசி என்பது ஐதராபாத்தை தளமாகக் கொண்ட பயோலாஜிக்கல்-இ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கொரோனாவுக்கு எதிரான உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஆர்.பி.டி. (RBD) புரத துணை அலகு தடுப்பூசி ஆகும். தற்போது இந்தியாவில் உருவாக்கப்பட்ட 3-வது தடுப்பூசி இதுவாகும்.

அதே சமயம் நானோ துகள்கள் தடுப்பூசி கோவோவாக்ஸ் புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவால் தயாரிக்கப்பட்டது. மேலும் மோல்னுபிராவிர் ஒரு வைரஸ் தடுப்பு மருந்தாகும். இது தற்போது நாட்டில் 13 நிறுவனங்களால் தயாரிக்கப்படும் மருந்து. இது கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட வயது வந்த நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு பயன்படும்” என்று மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். 

மேலும் “கொரோனாவுக்கு எதிரான போரை நரேந்திரமோடி முன்னணியில் இருந்து வழிநடத்துகிறார் என்றும் இந்த தடுப்பூசிகளுக்கான ஒப்புதல்கள் அனைத்தும் தொற்றுநோய்க்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை மேலும் வலுப்படுத்தும் என்றும், எங்கள் மருந்து நிறுவனங்கள் உலகம் முழுவதற்குமான சொத்து என்றும் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.