நாய் கடித்து மயக்கமடைந்த குரங்குக்கு வாயோடு வாய் வைத்து ஊதி, உயிரை காப்பாற்றிய பஸ் டிரைவரின் மனித நேய செயல், இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அம்பவம் நடந்திருக்கிறது.

பெரம்பலூர் மாவட்டம் ஒதியம் கிராமத்தில் கடந்த 9 ஆம் தேதி அன்று அரசு பேருந்து ஓட்டுநர் பிரபு என்பவர், தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்து உள்ளார்.

அப்போது அந்த வழியில் சின்ன குரங்கு ஒன்றை, அந்த பகுதியில் உள்ள தெரு நாய்கள் சில விரட்டிச் சென்று கடித்துக் குதறி உள்ளன.

இதில், படுகாயமடைந்த அந்த குட்டி குரங்கு, தன்னை காப்பாற்றிக்கொள்ள மரத்தின் மீது ஏறிய நிலையில், அப்படியே அங்கேயே  மயங்கி உள்ளது. 

இதனைப் பார்த்த பதற்றமடைந்த பஸ் டிரைவர் பிரபு, துளியும் தாமதிக்காமல் அந்த குட்டி குரங்கை தன் நண்பரின் உதவியுடன், பத்திரமாகக் கீழே இறக்கினார்.

மேலும், மயங்கிய நிலையில் இருந்த அந்த குரங்கிற்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்க முடிவு செய்த அந்த நபர், தனது நண்பரின் உதவியுடன் பெரம்பலூரில் உள்ள கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று உள்ளார். 

அப்போது, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, பாதி வழியில் குரங்கின் தலை துவண்டு விழுந்து உள்ளது. 

இதனால், பதறிப்போன பிரபு, குரங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதை உணர்ந்து, உடனடியாக அந்த வாகனத்தை நிறுத்தி, குரங்கைத் தரையில் கிடத்தி, அதன் நெஞ்சு பகுதியில் தனது கையால் அழுத்தி அழுத்தி அதனைச் சாக விடாமல் போராடினார்.

அவர் எவ்வளவோ முயன்றும், அந்த குட்டி குரங்கு, எவ்வித அசைவும் இல்லாமல் அப்படியே இருந்து உள்ளது. 

இதனையடுத்து, இன்னும் பதற்றமடைந்த அந்த மனித நேயம் படைத்த மாமனிதர், குரங்கு என்றும் பார்க்காமல், அந்த குட்டி குரங்கின் வாயோடு, தனது வாயை வைத்து ஊதினார். 

இப்படியாக, வாயோடு வாய் வைத்து பிரபு தொடர்ந்து ஊதி வந்ததால், சந்று நேரத்தில் அந்த அழகான குட்டி குரங்கு மூச்சு விட ஆரம்பித்தது.

மேலும், மூச்சுவிடத் தொடங்கியதும் அந்த குரங்கு கண் விழித்துப் பார்த்தது. அப்போது, குரங்கிற்கு உயிர் கொடுத்த மாமனிதர் பிரபு, அந்த குட்டியான குரங்கை, தனது மார்போடு அணைத்துக் கொஞ்சி மகிழ்ந்தார். பின்னர், அந்த குரங்கிற்கு குடிக்கத் தண்ணீர் வழங்கினார்.

அதன் தொடர்ச்சியாக, அந்த பகுதியில் உள்ள வனத்துறையினருக்கு அவர் தகவல் தெரிவித்து குரங்கை அவர்களிடம் ஒப்படைத்தார்.

இந்த காட்சிகளை எல்லாம் அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் மற்றும் அவருடன் இருந்த நண்பரும் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இதனால், இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

தற்போது, இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருவதால், அரசு பஸ் டிரைவர் பிரபுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மிக முக்கியமாக, பஸ் டிரைவரின் இந்த மனித நேய செயலின் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி வருண் குமார் “யாமறிந்த தெய்வம்” என்றும், பதிவிட்டு, பிரபுவுக்கு புகழாரம் சூட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.