“பள்ளியில் குட்கா பயன்படுத்த வேண்டாம்” என்று, கண்டித்த ஆசிரியரின் தலையில் குப்பையை கொட்டிய மாணவர்கள் அவரை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

“ஆசிரியரிடம் அடிவாங்காத மாணவர் உருப்பிடமாட்டான்” என்ற ஒரு சொல்லாடல், தமிழ்நாட்டில் உண்டு.

ஆனால், “ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்கிறார்கள்” என்று, சம கால பெற்றோர்கள் போர்கொடி தூக்கத் தொடங்கிவிட்ட காலத்தில் நாம் இப்போது இருக்கிறோம். 

“ஆனால், மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கும் காலம் போய், ஆசிரியரை மாணவர்கள் தாக்கும் காலம் வந்தால்?” நாம் அதை யோசித்துக்கூட பார்க்க முடியாது. ஆனால், அப்படியான ஒரு காலம் இதோ தற்போது வந்துவிட்டது.

ஆம், அப்படியான ஒரு துயரமான சம்பவம், தற்போது கர்நாடகாவில் நடந்து, அனைத்து தரப்பு மக்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

கர்நாடகா மாநிலம் தேவனாகிரி மாவட்டம் நல்லூரில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. 

இந்த அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களில் சிலர், பள்ளியிலேயே அதுவும் வகுப்பறையிலேயே குட்கா போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்துவதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு.

குறிப்பாக, பள்ளிக்கு வெளியே குட்கா போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்தி வந்த பள்ளி மாணவர்கள், தற்போது வகுப்பறையில் குள்ளேயே அவற்றை பயன்படுத்திவிட்டு அந்த வகுப்பறையின் உள்ளே உள்ள குப்பை தொட்டியிலேயே காலியான குட்கா பாக்கெட்டை போட்டிருக்கிறார்கள். 

இதனை கவனித்த அந்த பள்ளியின் ஆசிரியர் ஒருவர், கடும் அதிர்ச்சியடைந்த நிலையில், “இது போன்று குட்கா பொருட்களை பயன்படுத்த கூடாது” என்று, அறிவுரை வழங்கி, கண்டிப்புமனட கூறியிருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக, அந்த ஆசிரியர் எப்போதும் போல் பாடம் நடத்திக்கொண்டிருந்த நிலையில், அப்போது அந்த வகுப்பளையில் இருந்த மாணவர்களில் சிலர், கடுமையாக கூச்சலிட்டுக் கொண்டே இருந்து உள்ளனர். 

அப்போது, அந்த ஆசிரியர் திரும்பி பார்த்ததும் மாணவர்கள் அமைதியாவதுமாக இருந்து உள்ளனர். 

ஒரு கட்டத்தில், அந்த மாணவர்களில் சிலர் கோபம் கொண்டு, அந்த ஆசிரியரின் தலையின் மீது குப்பை தொட்டியை கவிழ்த்து விட்டு, அவரை தாக்கியதாகவும் தெரிகிறது.

குறிப்பாக, ஆசிரியரை சக மாணவர்கள் தாக்கும் சம்பவங்களை, அங்கிருந்த ஒரு மாணவன் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி உள்ளான். 

இப்படி, கடந்த 3 ஆம் தேதி இச்சம்பவம், இணையத்தில் வைரலானதால், தற்போது தான் வெளி உலகிற்கு தெரிய வந்திருக்கிறது.

இந்த சம்பவம், அந்த மாநிலம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக பேசியுள்ள அந்த மாநில கல்வித்துறை அமைச்சர் நாகேஷ், “ஆசிரியர்களை மாணவர்கள் தாக்குவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று, உறுதிப்படத் தெரிவித்துள்ளார். 

“அரசு எப்போதும் ஆசிரியர்களுக்கு ஆதரவாகவே இருக்கும் என்றும், இது தொடர்பாக விசாரணை செய்ய உத்தரவிட்டு உள்ளேன்” என்றும், அவர் கூறியுள்ளார்.

மேலும், “சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது துறை ரீதியாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், அவர் கூறினார்.

இதனிடையே, தாக்கப்பட்ட ஆசிரியர், மாணவர்களின் எதிர்காலம் கருதி அவர்கள் மீது புகார் கொடுத்த மறுத்துவிட்டார் என்றும், கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.