தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையும் 33 பேர் கொண்ட அமைச்சரவை உறுப்பினர்களும் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். 

நடந்து முடிந்து உள்ள 2021 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் கைப் பற்றி அமோக வெற்றி பெற்று, தமிழகத்தில் ஆட்சி அமைத்து உள்ளது. 

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அண்ணா அறிவாலயத்தில் நடந்த திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் திமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டார். 

அதன் தொடர்ச்சியாக, ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்ட கடிதத்தை எடுத்துக்கொண்டு, தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க ஆளுநரை நேரில் சந்தித்து உரிமை கோரினார். 

அத்துடன், தனது அமைச்சரவையில் இடம் பெற போகும் 34 பெயர்கள் கொண்ட அமைச்சர்கள் பட்டியலை ஆளுநரிடம் சமர்ப்பித்தார்.

இதனையடுத்து, 34 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பட்டியலை ஆளுநர் மாளிகை, நேற்றை மாலை அதிகாரப் பூர்வமாக வெளியிட்டது.

இந்நிலையில், கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வளாகத்தில் உள்ள திறந்தவெளி அரங்கில், பதவி ஏற்பு விழா மிக எளிமையாக நடைபெற்று வருகிறது.  

காலை 8.45 மணிக்கு மேல் நடைபெற்ற இந்த விழாவில், இன்று காலை 9 மணிக்கு மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றார்.

அதாவது, தமிழ்நாட்டின் 23 வது முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு, ஆளுநர் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். 

அப்போது, “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும்..” என்று கூறி, பதவியேற்றுக் கொண்டார் மு.க.ஸ்டாலின்.

அதே நேரத்தில், முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதைக் கண்டு, அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர் வடித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைத் தொடர்ந்து, அவரது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர் பெருமக்கள் அனைவரும் ஒவ்வொருவராகத் தொடர்ந்து அமைச்சர்களாகப் பதவி ஏற்று வருகின்றனர். 

திமுக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உள்பட சுமார் 160 பேர்கள் மட்டும் இந்த விழாவில் கலந்துகொள்வார்கள் என்று கூறப்பட்டது. இதனால், பதவியேற்பு விழாவை வீட்டிலிருந்தபடி திமுக தொண்டர்கள் காண வேண்டும் என்றும், மு.க. ஸ்டாலின், ஏற்கனவே தனது கட்சித் தொண்டர்களைக் கேட்டுக்கொண்டார். 

இந்த விழாவில் திமுக எம்.எல்.ஏக்கள், திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள், அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

தற்போது, அமைச்சர் பெருமக்கள் ஒவ்வொருவராகப் பதவி ஏற்றுக்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, முதலமைச்சராகப் பதவியேற்ற மு.க.ஸ்டாலின் தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்குச் சென்று, மரியாதை செய்ய இருக்கிறார். 

மேலும், மறைந்த திமுக நிர்வாகி சிட்டி பாபுவின் இல்லத்திற்குச் சென்று அவரின் உருவப் படத்திற்கும் ஸ்டாலின் மரியாதை செய்ய இருக்கிறார். தொடர்ச்சியாக கோபாலபுரத்தில் உள்ள தனது இல்லத்திற்குச் சென்று தனது தாயார் தயாளு அம்மாளை சந்தித்து மு.க.ஸ்டாலின் வாழ்த்து பெற இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.