புதுக்கோட்டை அருகே மனைவியை கொன்றுவிட்டு, மகளை பாலியல் பலாத்காரம் செய்து வந்த கொடூர தந்தைக்கு, மரண தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

புதுக்கோட்டை அடுத்து உள்ள தேனிப்பட்டியை சேர்த 52 வயதான முருகேசன் என்பவர், தனது மனைவி உடன் வசித்து வந்தார். 

முக்கியமாக, முருகேசனுக்கு மொத்தம் 3 மனைவிகள் உள்ளனர். இந்த 3 மனைவிகளுக்கும் சேர்த்து மொத்தம் 10 பிள்ளைகள் இருந்திருக்கிறார்கள்.

இதில், கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால், 2 வது மனைவிக்கு பிறந்த ஒரு ஆண் மற்றும் பெண் பிள்ளைகளுடன் அதே ஊரில் வசித்து வந்த முருகேசன், இரண்டாவது மனைவிக்குப் பிறந்த 16 வயது மகளை மிரட்டி, அவருடன் பாலியல் உறவு வைத்திருந்து வந்தார் என்று கூறப்பட்டது. 

இந்த விசயம், அந்த சிறுமியின் தாயாரும், 2 வது மனைவியான அந்த பெண்ணுக்குத் தெரிய வந்துள்ளது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அவரது 2 வது மனைவி, கணவன் முருகேசனை கடுமையாக கண்டித்து உள்ளார்.

அப்போது, கடும் ஆத்திரமடைந்த கணவன் முருகேசன், கடந்த 2019 ஆம் ஆண்டு, தென்னந்திரயான்பட்டி கிராமத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த தனது 2வது மனைவியை கொன்று விட்டு, ஒன்றும் தெரியாதது போல் போலீசாரிடம் நாடகமாடி வந்திருக்கிறார். 

இந்த கொலை சம்பவம் குறித்து வழங்குப் பதிவு செய்த கணேஷ் நகர் போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில், “மகள் என்றும் பார்க்காமல், மகளை மிரட்டி அவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டு வந்ததை, அவரது 2 வது மனைவி கண்டித்ததால், ஆத்திரமடைந்த கணவன் முருகேசன் திட்டம்போட்டு, அவரது 2 வது மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த தெரிய வந்தது.

இதனையடுத்து, கொலை குற்றவாளியான முருகேசனை அதிரடியாகக் கைது செய்த போலீசார், அவரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு, ஒப்புதல் வாக்கு மூலம் பெற்றுக்கொண்டனர். அப்போது, அவர் தனது 2 வது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டதோடு, அதற்கான காரணத்தையும் கூறி போலீசாரை அதிர வைத்து உள்ளார்.

பின்னர், அவரை நீதிமன்றத்தில் முன்னிறுத்திய போலீசார், புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைத்தனர். இது நாள் வரை, இது தொடர்பான வழக்கு, புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கின் விசாரணையை முழுவதுமாக முடிவடைந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சத்யா, இன்று அதிரடியாகத் தீர்ப்பு வழங்கினார்.

அந்த தீர்ப்பில், “தன்னுடைய 2 வது மனைவியை கொன்ற குற்றத்திற்காக, கணவன் முருகேசனுக்கு அதிக பட்சமாக மரண தண்டனை விதித்து” உத்தரவு பிறப்பித்தார். 

மேலும், “2 வது மனைவிக்கு பிறந்த மகளுடன் பாலியல் உறவு வைத்திருந்த குற்றத்திற்காக, அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தும்” நீதிபதி பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். 

அத்துடன், “தனது மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததற்காக 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், அந்தப் பெண்ணிற்குக் கொலை மிரட்டல் விடுத்ததற்காக மேலும் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தும், இவற்றுடன் 3 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து” புதுக்கோட்டை மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். இதனால், புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.