ஹாலிவுட் திரையுலகில் ஹாரர் படங்களுக்கும்  த்ரில்லர் படங்களுக்கும் தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஹாலிவுட்டில் தயாராகும் இதுமாதிரியான ஹாரர் த்ரில்லர் திரைப்படங்களைப் பார்ப்பதற்கு என இந்தியாவில் மிகப்பெரிய ரசிகர் கூட்டங்கள் இருக்கின்றன. இந்த வகையில்  சண்டே நைட் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில்  ஜான் கிராஸிங்ஸ்கி  இயக்கத்தில் வெளிவரவுள்ள திரைப்படம் A Quiet Place part-2. 

A Quiet Place  முதல் பாகத்தையும் இதே இயக்குனர் தான் இயக்கினார். முதல் பாகத்துக்கு கிடைத்த ஏகோபித்த வரவேற்பு இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் உருவாக்க முக்கிய காரணமாக அமைந்தது. 

 ஒரு வகையான விசித்திரமான ஜந்துக்களின் படையெடுப்பால் ஒரு நகரமே அழிவுக்குள்ளாகிறது. பார்வையற்ற அந்த ஜந்துக்கள் அந்த நகரத்தில் இருக்கும் அனைத்து மக்களையும் கொன்று குவிக்கிறது.  நகரில் உள்ள மொத்த மக்களும் அழிந்து நகரமே வெறிச்சோடி காணப்படுகிறது.

 

இந்நிலையில் அந்த நகரில் இரண்டு குடும்பங்கள் மட்டும் உயிரோடு இருக்கின்றனர். பார்வை இல்லாவிட்டாலும் மிக நுட்பமாக கேட்கும் திறன் வாய்ந்த  அந்த ஜந்துக்கள் ஒரு சிறிய அசைவுகளைக் கூட  உணரக் கூடியது. இதனால் அந்த இரண்டு குடும்பத்தினரும் மௌனமாகவே இருக்கிறார்கள். மௌனமாகவே இருந்து அவர்கள் எப்படி அந்த ஜந்துக்களிடம் இருந்து தப்பித்தார்கள் என்பதே திரைப்படத்தின் மூலக்கதை. 

அதிகமாக வசனங்களே இல்லாமல் நகரும் திரைக்கதை அதிலிருக்கும் சுவாரசியத்தால் ரசிகர்களை கண் இமைக்காமல் பார்க்க வைக்கிறது. காட்சிக்கு காட்சி விறுவிறுப்பும்  பதபதைப்புமாக  படமாக்கப்பட்டு உள்ளதால் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இப்போது உருவாகி இந்த வருடம் மே மாதம்  வெளிவர தயாராக உள்ளது. இன்று மாலை சற்று நேரத்திற்கு முன்பு இந்த திரைப்படத்தின் கடைசி டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.