மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பலரும் பங்கேற்று உள்ளனர்.

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையும் 34 பேர் கொண்ட அமைச்சர்களும் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 34 அமைச்சர்களுக்கும் ஆளுநர் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். 

கொரோனா பெருந்தொற்று காரணமாக, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் முதல்வர் பதவியேற்பு விழாவானது, மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காகத் தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்களுக்கும், முக்கிய பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

அதன் படி, மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார். பதவி ஏற்பு விழா முடிந்ததும், மு.க.ஸ்டாலின் உடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேநீர் அருந்தினார் என்று கூறப்படுகிறது.

அதே போல், அதிமுக சார்பில் தனபால் மற்றும் நவநீத கிருஷ்ணன் ஆகியோரும் கலந்துகொண்டனர். 

அத்துடன், பாஜக சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் பங்கேற்றார். 

மேலும், திமுக கூட்டணி கட்சி தலைவர்கள், எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர்.

குறிப்பாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். 

காங்கிரஸ் கட்சியின் சார்பில் தினேஷ் குண்டுராவ், கே.எஸ். அழகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

அதே போல், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுக எம்.பி கனிமொழி மற்றும் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலரும் பங்கேற்றனர். 

முன்னதாக, ஆளுநர் மாளிகைக்குப் பாதுகாப்பு வாகனங்கள் அணி வகுப்புடன் வந்த மு.க ஸ்டாலினுக்கு, திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த உற்சாக வரவேற்பை மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார்.

அதே போல், “முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள மு.க ஸ்டாலினுக்கு டிடிவி தினகரன், வாழ்த்துகளைத் தெரிவித்து” உள்ளார்.

மேலும், மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்கும் விழா சிறக்க, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இதனிடையே, தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கும் போது, அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர் விட்டார். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.