கொரோனாவின் இரண்டாம் அலை உலகம் முழுவதும் அனைவரையும் பதைபதைக்க வைக்கிறது. இதில் ஆக்சிஜன் தட்டுப்பாடு மக்களைத் திணறடித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகிறார்கள். நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், தற்போது வயது வித்தியாசம் இல்லாமல் நல்ல உடல் நிலையில்  18 வயதில் இருந்து 40 வயதிற்குள் இருக்கக்கூடிய நபர்களும் கொரோனாவால்  பாதிக்கப்பட்டு மோசமான உடல் நிலையில் தீவிர சிகிச்சையும் பலனின்றி உயிரிழப்பதை நம்மால் காண முடிகிறது.

விஜய் டிவி தொலைக்காட்சியில் வெளியான கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம் என்ற தொலைக்காட்சி தொடர் மூலமாக அறிமுகமான பாலசரவணன் அதே தொலைக்காட்சியில் வெளிவந்த கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை என்ற தொடரின் மூலம் தமிழகத்தில் மிகவும் பிரபலம் அடைந்தார். இயக்குனர் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த குட்டி புலி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான பாலசரவணன் பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், டார்லிங், ஒரு நாள் கூத்து, கவலை வேண்டாம் என பல வெற்றித் திரைப்படங்களில் நகைச்சுவை வேடத்தில் மக்களை கவர்ந்துள்ளார். கடைசியாக இந்த வருடம் பொங்கலுக்கு வெளியான ஈஸ்வரன் திரைப்படத்தில்  சிலம்பரசனுடன் இணைந்து பணியாற்றினார் நடிகர் பாலசரவணன்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக நடிகர் பாலசரவணனின் தங்கையின் கணவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளானார். தீவிர சிகிச்சையில் இருந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த பாலசரவணன் என் தங்கையின் கணவருக்கு வயது 32. இது குறித்து டுவிட்டரில் பதிவு செய்த பாலசரவணன், 

“அன்பு நண்பர்களே எனது தங்கையின் கணவர்  கொரோனா காரணமாக உயிரிழந்துவிட்டார். அவருக்கு வயது 32. நமக்கெல்லாம் வராது என  நினைப்பது கோழைத்தனம்!!! தயவு கூர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும் மிக கவனமாக இருக்கவும் நம்மை பாதுகாக்க நம்மால் மட்டுமே முடியும் முக கவசம் அணிவீர்"

என பதிவு செய்துள்ளார்.