காதலர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில், காதலி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். காதலன் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் யாவரும், இன்று காதலர் தினத்தைக் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். இப்படியான சூழலில், நாகை மாவட்டத்தில் ஒரு இளம் காதல் ஜோடி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில், காதலி பரிதாபமாக உயிரிழந்து உள்ள சம்பவம், சக காதல் ஜோடிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாகை மாவட்டம் திருப்புகலூர் அடுத்து உள்ள புதுக்கடை மேல தெருவைச் சேர்ந்த கலிய பெருமாள் என்பவரின் மகள் 28 வயதான ரேணுகா தேவி, அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். 

அதே போல், மயிலாடுதுறை அடுத்து உள்ள மங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த கப்பூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த தனபால் என்பவரின் மகன் 30 வயதான கோபிநாத் என்ற இளைஞர், அந்த பகுதியில் பணியாற்றி வந்தார்.

இப்படியான சூழ்நிலையில், கோபிநாத்தும் - ரேணுகா தேவியும் காதலித்து வந்து உள்ளனர். 

இந்த நிலையில், இந்த இளம் காதல் ஜோடிகளின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பி உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த காணப்பட்ட இந்த காதல் ஜோடி,  வீட்டில் சரிவர பேசாமல் இருந்து உள்ளனர்.

இந்நிலையில், இளம் பெண் ரேணுகா தேவி, வீட்டில் “வேலைக்கு செல்வதாக” கூறி விட்டு, வீட்டிலிருந்து கிளம்பிச் சென்றிருக்கிறார். இதனையடுத்து, அவர்  வீடு திரும்பாத நிலையில், அவரது செல்போனும் சுவிட் ஆப்பாகி உள்ளது.

இதனையடுத்து ரேணுகா தேவியின் பெற்றோர், தங்களது மகளை அக்கம் பக்கம் முழுவதும் தேடி பார்த்து உள்ளனர். ஆனால், எங்குத் தேடியும் அவர் கிடைக்கவில்லை. 

அதே நேரத்தில், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்து உள்ள சன்னாநல்லூர் ரயில்வேகேட் அருகே இளம் பெண் ரேணுகா தேவியும், காதலன் கோபிநாத்தும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்று உள்ளனர். 

இதில், ரேணுகா தேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். இது தொடர்பாக அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், இது தொடர்பாக விரைந்து வந்த போலீசார், அவரது உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காகத் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த காதலன் கோபிநாத்தையும் மீட்ட போலீசார், நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவருக்குத் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இது குறித்து நன்னிலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் தான், அவர்கள் இருவரும் காதலர்கள் என்பது போலீசாருக்கு தெரிய வந்தது.

இதனிடையே, காதலர் தினமான இன்று, காதலர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் காதலி உயிரிழந்துள்ள சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.