சென்னை உயர்நீதிமன்றத்தில் மீனவர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பீட்டர்ராயன் என்பவர் மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்களுக்கு நாள்தோறும் ரூ. 500 வீதம் நிவாரண உதவி வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மெரினா கடற்கரையை தூய்மைப்படுத்துவது, புயலில் சேதமடைந்த பெசன்ட் நகர் - லூப் சாலையை புணரமைப்பது, மீன் கடைகளை ஒழங்குபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு செப்டம்பர் 29ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது பல்வேறு துறைகளுக்கும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு எப்போது அனுமதி அளிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இவ்வழக்கு மீண்டும் அக்டோபர் 5ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் அக்டோபர் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் கடற்கரைகள், திரையரங்குகள் ஆகியவற்றைத் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகச் சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 அதன்பின் இவ்வழக்கு மீண்டும் அக்டோபர் 13 விசாரணைக்கு வந்தது. அப்போது மெரினாவில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதாகப் பத்திரிக்கைகளில் செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை எப்படிச் சரி செய்யப் போகிறீர்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்பட்டு விட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 
 
இதையடுத்து மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு எப்போது அனுமதி அளிக்கப்படும் என்று நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு, அனுமதி வழங்குவது குறித்து அரசு தான் முடிவு எடுக்கும் என்று ஆணையர் பிரகாஷ் குறிப்பிட்டார். இதை விசாரித்த நீதிபதிகள், நவம்பர் மாதம் முதல் மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும், தமிழகத்தில் உள்ள கடற்கரைகளை மேம்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று (நவம்பர் 18) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நவம்பர் மாதம் இறுதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், மெரினா கடற்கரையை பொதுமக்களுக்கு திறப்பது தொடர்பாக டிசம்பர் முதல் வாரத்திற்குள் முடிவெடுத்து தெரிவிக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இதை கேட்ட நீதிபதிகள், டிசம்பர் முதல் வாரத்திற்குள் அரசு முடிவெடுக்காவிட்டால், நீதிமன்றமே உரிய உத்தரவு பிறப்பிக்கும் என தெரிவித்தனர்.மேலும், மெரினா கடற்கரையில் தள்ளுவண்டிகளுக்கான டெண்டரை திறக்க தனி நீதிபதி தடைவிதித்த வழக்கும் இதே நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 900 தள்ளு வண்டிகளுக்கான டெண்டர் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என மாநகராட்சிக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், லூப் சாலை மற்றும் மீன் சந்தைகளை முறைப்படுத்துவது தொடர்பாக 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 3-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

சென்னை மெரினா கடற்கரையில் மீன் அங்காடிகளை முறைப்படுத்துவது தொடர்பாகவும், கடற்கரையை தூய்மைப்படுத்துவது தொடர்பாகவும் தொடரப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் ரமேஷ் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது.