50 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் கடந்த 25 ஆம் தேதி, வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் சுஜித், அந்த பகுதியில் மூடப்படாமல் கிடந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த ஈரம் காய்வதற்குள், அதேபோல் ஒரு சம்பவம் ஹரியானாவில் தற்போது நடந்துள்ளது.

Haryana Borewell

ஹரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தில் உள்ள ஹர்சிங்புரா கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி ஷிவானி, வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, வீட்டின் அருகே மூடப்படாமல் கிடந்த ஆழ்துளைக் கிணற்றில் அவர் எதிர்பாராத விதமாகத் தவறி விழுந்துவிட்டார்.

இதனையடுத்து, தீயணைப்புப் படையினர் மற்றும் மீட்புப்படையினர் விரைந்து வந்து சிறுமியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்காக ஆழ்துளைக் கிணற்றின் அருகே ராட்சத இயந்திரங்கள் மூலம், மிக்பெரிய பள்ளம் தோண்டப்பட்டது. 

அப்போது, 50 அடி ஆழத்தில் சிறுமி சிக்கி இருப்பதாகவும், சிறுமிக்குத் தொடர்ந்து ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. மேலும், சிறுமியை மீட்ட உடன், அவருக்குச் சிகிச்சை அளிப்பதற்காக, மருத்துவர்கள் குழுவும் அங்குத் தயார் நிலையில் வைக்கப்பட்டன. 

Haryana Borewell

சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், சிறுமி உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், மீட்புப் பணிகள் முற்றிலுமாக தோல்வியடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், இப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.