அரியலூர் அருகே அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தமிழ் ஆசிரியர் மற்றும் இந்த சம்பவத்தை மறைக்க முயன்ற தலைமை ஆசிரியர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர் மாவட்டம் காட்டுபிரிங்கியம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் உடையார்பாளையத்தை அடுத்த பிலிச்சுக்குழி கிராமத்தை சேர்ந்த அருள்செல்வன் (35) என்பவர் தமிழாசிரியராக பணிபுரிந்து வருகிறார். 

இந்நிலையில், நேற்று அந்தப் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு அருள்செல்வன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து தலைமையாசிரியை ராஜேஸ்வரியிடம் (53)  மாணவி புகார் அளித்துள்ளார். 

இதையடுத்து மாணவி மற்றும் தமிழாசிரியரை அழைத்து பேசிய ராஜேஸ்வரி இதனை பெரிதுப்படுத்த வேண்டாம் என கூறியுள்ளார். இந்நிலையில் இச்சம்பவம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்த நிலையில், இன்று பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டனர்.

ariyalur sexual harassment

ஆசிரியரின் தவறான நடத்தைக் குறித்து பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தார்கள். ஆனால் பள்ளி நிர்வாகத்தினர் ஆசிரியர் மீது எந்தவித நடவடிக்கையுமே எடுக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் சம்பந்தப்பட்ட பள்ளியை முற்றுகையிட்டு இன்று பெற்றோர்கள் மறியல் செய்தனர்.

தகவலறிந்து பள்ளிக்கு வந்த அரியலூர் டிஎஸ்பி மதன் மற்றும் காவல்துறையினர்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதுடன், தமிழாசிரியர் அருள்செல்வனை காவல்நிலையம் அழைத்து சென்று செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதோடு, பள்ளியில் யார், யாரிடம் பாலியல் ரீதியான தொந்தரவை அவர் மேற்கொண்டார் என்ற விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. 

அப்போது ஆசிரியர் அருள்செல்வன் கடந்த மாதம், 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடமும் பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்துள்ளது. மேலும் பல மாணவகளிடமும் மற்றும் பயிற்சி ஆசிரியைகளுக்கும் தமிழாசிரியர் அருள்செல்வன் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. 

தமிழ் ஆசிரியர் அருள்செல்வன் மீதான விசாரணையை துரிதமாக நடத்தி அவர் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர்கள்  கோரிக்கை விடுத்திருந்தனர்.

ariyalur sexual harassment

இந்நிலையில் காவல் நிலையத்தில் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையிலும் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையிலும் தமிழாசிரியர் அருள்செல்வனை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் அருள்செல்வன் மீது புகார் தெரிவித்த போது நடவடிக்கை எடுக்காமல் இருந்த தலைமை ஆசிரியை ராஜேஸ்வரியையும் அரியலூர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தை வெளியில் சொல்லக்கூடாது என்று மாணவ-மாணவிகளையும், பெற்றோரையும் தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி எச்சரித்ததாக கூறப்படுவதால், குற்றத்திற்கு துணை போன குற்றச்சாட்டில் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமன் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் துரைமுருகன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.