நடிகர் கமல்ஹாசன் உடல்நிலை சீராக உள்ளதாக அவர் சிகிச்சை பெற்று வரும் ராமச்சந்திரா மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமலஹாசன், ஹவுஸ் ஆஃப் கதர் என்ற தனது ஃபேஷன் பிராண்டை தொடங்க அண்மையில் அமெரிக்கா சென்றார். இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து திரும்பிய கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த அவர், “அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என பதிவிட்டார்.

இதையடுத்து சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக நடிகர் கமல்ஹாசன் சேர்க்கப்பட்டார்.  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கமல்ஹாசன், விரைவில் குணமடைய வேண்டும் என அவரது ரசிகர்களும், கட்சித் தொண்டர்களும், சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

Kamal Hassan

முதல்வர் ஸ்டாலின் கமல்ஹாசன் விரைவில் நலமடைந்து திரும்ப வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசனை நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும் கமல்ஹாசன் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்பவேண்டும் என்ற தனது விருப்பத்தையும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

சுவாச பாதை நோய்த்தொற்று மற்றும் காய்ச்சல் காரணமாக கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ள ராமச்சந்திரா மருத்துவமனை, அவ்வப்போது அவரது உடல்நிலை குறித்த தகவலை அறிக்கையாக வெளியிட்டு வருகிறது.

அதன்படி, கமல்ஹாசன் உடல்நிலை சீராக உள்ளதாக ராமச்சந்திரா மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மருத்துவ பரிசோதனை முடிவுகள் திருப்தி அளிக்கிறது. கமல்ஹாசன் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kamal Hassan corona

67 வயதான நடிகர் கமலஹாசன், நவம்பர் 7 ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். கமல் சமீபத்தில் ஹவுஸ் ஆஃப் கதர் என்ற தனது ஃபேஷன் பிராண்டை தொடங்க அமெரிக்கா சென்றார். இந்த நிகழ்வு கடந்த வாரம் சிகாகோவில் நடந்தது.

இந்தியா திரும்பிய பிறகு, கமல்ஹாசனும் வார இறுதி எபிசோட்களை தொகுத்து வழங்குவதற்காக பிக்பாஸ் செட்டுகளுக்கு சென்றார். வார இறுதி எபிசோட்களில், வீட்டில் உள்ள போட்டியாளர்களுடனும், ஸ்டுடியோவில் பார்வையாளர்களுடனும் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்ட கமலிடம் நோய்க்கான அறிகுறியே இல்லை. ஆனால் தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன், ஏற்கனவே கொரோனா தடுப்பூசி போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது இதுவே முதல் முறை.