“3 வாரங்களுக்குள் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை தீபா மற்றும் தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டும்’’ என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை தான் வரவேற்பதாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றுவதற்கு நிலம் கையகப்படுத்தும் தமிழக அரசின் நடைமுறைகளை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. அத்துடன், ஜெயலலிதா செலுத்தவேண்டிய வருமான வரி பாக்கி ரூ.36,87,23,462 வசூலை வருமான வரித்துறை தனியாகத் தொடங்கலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

வேதா நிலையம் வழக்கில் நீதிபதி என்.சேஷசாயி பிறப்பித்த தீர்ப்பில் “ஒரு சொத்தை கையகப்படுத்தும் முன் சம்பந்தப்பட்டவர்களுக்கு, 60 நாட்களுக்கு முன் தெரியப்படுத்தப்பட வேண்டும் என்ற விதி இந்த விஷயத்தில் அரசால் பின்பற்றப்படவில்லை. 

‘வேதா நிலையத்திற்கு யாரும் உரிமைதார்களே இல்லை’ என்ற ரீதியில் அரசு தானே அதிகாரத்தை கையில் எடுத்துள்ளது. தங்கள் கட்சி சார்ந்த தலைவரை கட்சி நிர்வாகிகள் கெளரவிப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இந்த வழக்கில் அரசியல் தலைமையையும், சொத்தின் உரிமையையும் பிரித்துப்பார்க்க அவர்கள் தவறிவிட்டார்கள்.

deepa

மேலும் உரிய விதிகளை பின்பற்றாமல், வேதா இல்லம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இப்படி வேதா இல்லத்தை அரசுடமையாக்கியது செல்லாது. அதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து செய்யப்படுகிறது. மேலும் 3 வாரத்தில் போயஸ் தோட்ட இல்லத்தை வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்கவும்” என்று இருந்தது.

இந்த தீர்ப்பு குறித்து பேசிய ஜெ.தீபா, “நியாயமான நேர்மையான இந்த தீர்ப்பை மகிழ்வுடன் வரவேற்கிறோம். இது நாங்கள் எதிர்பார்க்காத தீர்ப்பு. இவ்வளவு விரைவாக இப்படி ஒரு தீர்ப்பு கிடைக்குமென உண்மையிலேயே நாங்கள் நினைக்கவில்லை. கடும் போராட்டத்திற்கு பின்னர் தான் இத்தீர்ப்பை அடைய முடியும் என நினைத்தோம். அதிமுக இத்தீர்ப்பிற்கு மேல் முறையிட்டுக்கு செல்ல முடியாது. மாநில அரசு செல்ல முடியும். திமுக அரசு மேல்முறையீட்டு செல்லாது என எதிர்பார்க்கிறோம்.

3 வாரங்களுக்குள் கண்டிப்பாக போயஸ் வீட்டிற்குள் செல்ல முடியும் என நாங்கள் நினைக்கவில்லை. வருமான வரி உள்ளிட்ட சில வரிகள் செலுத்தி முடிக்க வேண்டியிருக்கும். சட்டரீதியான இன்னும் சில விஷயங்களை செய்து முடித்த பின்னரே வீட்டுக்கு செல்ல முடியும். அதற்கான காலம் எடுக்கும். தீபக்கிடம் தீர்ப்பு குறித்து பேசினேன். அவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்.

deepa 2

எனது அத்தை ஜெயலலிதாவின் ஆன்மா என்னை கைவிடவில்லை என நினைக்கிறேன். எங்கள் குடும்ப சொத்தை நான் அனுபவிக்க வேண்டும் என்பதே மறைந்த எனது பாட்டி, அப்பா, அத்தை உள்ளிட்டோரின் விருப்பமாக இருந்திருக்கும். அதனால் அவர்களது ஆன்மா தான் இன்று இப்படி ஒரு தீர்ப்பு வந்ததன் பின்னணியில் இருப்பார்கள் என்பது எனது நம்பிக்கை. அதிமுக ஆட்சியில் அத்தையோட வீட்டை கைப்பற்றியது முதல் நிம்மதி இல்லாமலே இருந்து வந்தேன்.

சசிகலாவை சந்திக்கும் திட்டம் ஏதும் இப்போது இல்லை, அவரை சந்திப்பது குறித்து நான் யோசிக்கக் கூட இல்லை. இந்த தீர்ப்பு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. அத்தை மட்டுமல்ல எனது அப்பாவும், பாட்டியும் கூட அந்த வீட்டில் வாழ்ந்திருக்கிறார்கள்.

இந்த தருணத்தில் பழசை பற்றி பேசவிரும்பவில்லை. எடப்பாடி பழனிசாமி தனி நபராக இதை செய்யவில்லை. அரசாங்க ரீதியில் முடிவெடுத்து அத்தை இல்லத்தை அரசுடைமை ஆக்கினார். இது குறித்தும் இன்னும் நான் பேசினால் அது அரசியல் பேசுவது போல் ஆகிவிடும். அதனால் அதை விட்டுவிடுவோம்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.