பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தில் ரெண்டு வருடங்களுக்கு பிறகு 2 பெண்கள் புகார் அளித்த பின்பு அதிமுக பிரமுகர் உட்பட மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பிரசாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, யார் தவறிழைத்தாலும் அதிமுக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்து உள்ளார். 


முன்னதாக  கைதான அதிமுக பிரமுகருக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அறிவித்து இருந்தார். மேலும் பொள்ளாச்சி நகர மாணவர் அணி செயலாளராக இருந்த அருளானந்தத்தை கட்சியிலிருந்து நீக்குவதாக அதிமுக தலைமைக் கழகம் அறிவித்தது.

அதன்பின்பு ’’ கட்சியின் கொள்கை, குறிக்கோள்கள், கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்து நீக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சி தொண்டர்கள் யாரும் அவருடன் எந்தவித தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது ’’என்று அதிமுக உத்தரவிட்டுள்ளது.