முக ஸ்டாலின் 5 வருடங்களாக சென்னை மேயராக இருந்தபோது, சென்னை மாநகராட்சிக்கு தேவையான எந்த நலத் திட்டங்களை செய்யவில்லை என்று முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றன. ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுகவின் கூட்டணிக்கு கட்சியான பாஜக சார்பில் போட்டியிடும் குஷ்பூவை ஆதரித்து பிரசாரம் செய்தார் முதல்வர் பழனிசாமி. அப்போது பேசிய அவர் முக ஸ்டாலின் 5 வருடங்களாக சென்னை மேயராக இருந்தபோது, சென்னை மாநகராட்சிக்கு தேவையான எந்த நலத் திட்டங்களை செய்யவில்லை என்று கூறினார்.

இது குறித்து மேலும் பேசிய அவர், "சென்னை மேயராக முக ஸ்டாலின் 5 வருடங்கள் இருந்தார். 5 ஆண்டுகள் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தார். இந்த காலகட்டங்களில் சென்னை மக்களின் எந்த தேவைகளையும் பூர்த்தி செய்யவில்லை. குடியிருப்பு வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி உட்பட எந்த அடிப்படை தேவைகளையும் முக ஸ்டாலின் நிறைவேற்ற வில்லை. திமுக ஆட்சியில் நிர்வாக கோளாறு காரணமாக மழைநீர் வீதிகளில் தேங்கி மக்கள் அவதிப்பட்டனர். தற்போது அதிமுக ஆட்சியில் 954 கிமீ மழைநீர் கால்வாய் அமைத்து மழைநீர் தங்கு தடையின்றி  வெளியேறுகிறது" என்றார்.