“அதிமுக, பாஜகவிற்கு அடிமையாக இல்லை என்றும்; திமுகதான் காங்கிரஸுக்கு அடிமையாக இருக்கிறது” என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிக கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார்.

வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூராவளி பிரச்சாரம் செய்து வருகிறார்.

அதன் படி, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஹெச். ராஜாவை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று இரவு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “திமுக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி” என்று, குறிப்பிட்டார்.

“அதிமுக கூட்டணி மக்களுக்குச் சேவை செய்யும் கூட்டணி என்றும், ஆனால் திமுக ஆட்சியில் எந்த சாதனையும் செய்தது இல்லை என்பதால், பரப்புரையில் அவர்களால் அதனைக் கூற முடியவில்லை”  முதலமைச்சர் கூறினார்.  

“மத்திய அரசு தமிழகத்திற்கு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்ற ஒரு லட்சம் கோடி ரூபாய் கொடுத்துள்ளதாக” கூறிய முதலமைச்சர் பழனிசாமி, “மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் தான் திட்டங்களைக் கொண்டு வர முடியும்” என்றும், அவர் குறிப்பிட்டார். 

“மத்தியிலும், மாநிலத்திலும் வாரிசு அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் தேர்தலாக இந்த தேர்தல் அமைய வேண்டும்” என்றும், முதலமைச்சரும் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக, “அதிமுக, பாஜகவிற்கு அடிமையாக இல்லை என்றும்; திமுகதான் காங்கிரஸுக்கு அடிமையாக இருக்கிறது” என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிக கடுமையாக விமர்சனம் செய்தார்.

அதே போல், முன்னதாக மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜூவை ஆதரித்து மதுரையில் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர்  பழனிசாமி, “உழைப்பால் மட்டுமே நான் உட்பட, அமைச்சர் உட்பட, அதிமுகவினர் அனைவரும் வளர்ந்துள்ளோம்” என்று, குறிப்பிட்டார். 

அத்துடன், “அமைச்சர் செல்லூர் ராஜூ, இந்த தொகுதியில் 2 முறை வெற்றி பெற்று இருக்கிறார். இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க வாய்ப்பு இல்லை என்றும், எனவே இவருக்கான வெற்றி சாதாரண வெற்றியாக இருக்க கூடாது” என்றும், தொகுதி வாக்காளர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

“அம்மா ஆட்சி தொடர வேண்டும் என்றால், இவரை வெற்றி பெற வைக்க வேண்டும்” என்றும், தொகுதி மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.

“அதிமுக உழைப்பால் உயர்ந்து இருக்கிறது என்றும், ஆனால் திமுக தனது குடும்பத்தை வளர்த்து வருகிறார்கள் என்றும், திமுகவில் நிதி நிதி என பெயர் வைத்து நாட்டில் நிதியை கொள்ளையடிக்கிறார்கள்” என்றும், முதலமைச்சர் குற்றம்சாட்டினார்.

மேலும், “திமுகவில் உள்ள வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், திமுக வை நிர்வாகம் செய்ய மூத்த தலைவர்கள் பலர் இருக்கும் நிலையில், பேரன் வயது உள்ள உதயநிதியை வைத்து பிரச்சாரம் செய்யும் பரிதாப நிலையில் அந்த கட்சி இருக்கிறது” என்றும், முதலமைச்சர் பழனிசாமி மிக கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.