சசிகலா விடுதலையாகி சென்னை வந்துள்ள நிலையில், ஈபிஎஸ் - ஓபிஎஸ் இணைந்து டெல்லி செல்ல உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக சிறையில் இருந்த சசிகலா விடுதலையான நிலையில், இன்று அதிகாலை சென்னை வந்து சேர்ந்தார். இதனால், அதிமுகவில் மட்டுமல்லாது, தமிழக அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

அத்துடன், “வரும் தேர்தலில் சசிகலா போட்டியிடுவது குறித்து சட்ட ஆலோசனை பெறப்படும்” என்று, டிடிவி தினகரன் கூறியுள்ளதும், அதிமுக வட்டாரத்தில் 
பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், ஈபிஎஸ் - ஓபிஎஸ் இணைந்து, டெல்லி செல்ல இருப்பதாக வெளியாகி உள்ள தகவல்கள், தமிழக அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

அதே நேரத்தில், அதிமுக அலுவலகம் ஒன்று, டெல்லியில் தற்போது புதிதாகக் கட்டப்பட்டு வருகிறது. அதன் கட்டுமானப் பணிகள் கிட்டத்தட்ட தற்போது முடிந்துவிட்டன. அதனைத் திறந்து வைப்பதற்காக, ஈபிஎஸ் - ஓபிஎஸ் இணைந்து, டெல்லி செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது. டெல்லி செல்லும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துடன், அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் சிலரும் டெல்லிக்குச் செல்ல இருப்பதாகவும் தகவல்கள் 
வெளியாகி உள்ளன.

அத்துடன், தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் கிட்டத்தட்ட நெருங்கி வரும் நிலையில், பல்வேறு கட்சிகள் தேர்தல் பணிகளில் பரபரப்பாகப் பிரச்சார களத்தில் குதித்து சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றனர். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், பெங்களூருவில் இருந்து சசிகலா தமிழ் நாட்டிற்கு இன்றைய தினம் திரும்பி வந்திருக்கிறார். இதனால், தமிழக அரசியல் களம் அனல் பறக்கத் தொடங்கி இருக்கிறது. 

மேலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் டெல்லி சென்று, அங்கு பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் சில 
முக்கிய தலைவர்களை அவர்கள் இருவரும் சந்தித்து பேசுவார்கள் என்பது பற்றிய தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. ஆனால், அப்படியான சந்திப்பு கடைசி நேரத்தில் கூட நடைபெறலாம் என்றும், அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

முக்கியமாக, கடந்த மாதம் ஜனவரி 18 ஆம் தேதி டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் நேரில் சந்தித்துப் பேசினார். 

தற்போது அதன் தொடர்ச்சியாக, அதிமுக டெல்லி அலுவலகத்தைக் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான பழனிசாமியும், கட்சியின் 
ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வமும், சேர்ந்து திறந்து வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், அவர்களது ஒற்றுமையான இந்த டெல்லி பயணம் தமிழக அரசியலில் இன்னும் பரபரப்பை எகிறச் செய்துள்ளது.

அதே போல், சசிகலா சென்னை வர கார் கொடுத்தவர் உட்பட அதிமுகவில் இருந்து 7 பேர் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து இன்றைய தினம் அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளனர். இது போன்ற நிகழ்வு, கடந்த ஒரு வார காலமாக அதிமுகவில் தொடர்கதையாகி வருகிறது. இதனால், அதிமுகவிற்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாகவும் சில முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.