மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கர்ணன். கலைப்புலி எஸ். தாணு இந்த படத்தை தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். படத்தில் ரஜீஷா விஜயன் நாயகியாக நடிக்க நடிகர் லால், நட்டி நட்ராஜ், கௌரி கிஷன், லக்ஷ்மி பிரியா, யோகிபாபு ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். 

இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு பணிகளும் கடந்த வருடம் டிசம்பர் மாதம் நிறைவடைந்து, போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் போய்க்கொண்டிருக்கிறது. திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியில் கர்ணன் ஷூட்டிங் நடைபெற்றது. படத்தின் பிரத்தியேக புகைப்படங்கள் வெளியாகி அசத்தலான வரவேற்பை பெற்றது. டைட்டில் லுக் போஸ்டர் மற்றும் மேக்கிங் வீடியோ தனுஷ் பிறந்தநாளில் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

கர்ணன் படத்தை பார்த்து விட்டு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சமீபத்தில் பதிவு ஒன்றை செய்திருந்தார். அதில் கர்ணன் படம் பார்த்தேன், திகைத்துப்போனேன். இயக்குனர் மாரி செல்வராஜ், நடிகர் தனுஷ் ஆகியோரை நினைத்தால் பெருமையாக உள்ளது. கர்ணன் அனைத்தும் கொடுப்பான் என்று புகழாரம் சூட்டி படத்தை விமர்சித்திருந்தார். 

படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்டு அசத்தினர் கர்ணன் படக்குழுவினர். ஏப்ரல் மாதம் சம்மர் ரிலீஸாக வெளியாகிறது கர்ணன். இதன் அறிவிப்பை டீஸராகவும் வடிவமைத்து வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். கையில் கத்தியுடன் கம்பீரமாக மலையில் தனுஷ் நிற்பது போல் அமைந்தது அந்த டீஸர். படத்தின் பாடல்கள் உரிமையை பிரபல திங்க் மியூசிக் பெற்றுள்ளதாக கர்ணன் படக்குழுவினர் நேற்று தெரிவித்தனர்.

இந்நிலையில் படத்திற்கான டப்பிங் பணிகளை நடிகர் தனுஷ் கிட்டத்தட்ட முடித்துவிட்டதாக தயாரிப்பாளர் தாணு பதிவு செய்துள்ளார். 

தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் D43 படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் தனுஷுக்கு நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். சமுத்திரக்கனி, ஸ்மிருத்தி வெங்கட் ஆகியோர் உள்ளனர். தனுஷ் நடிப்பில் ரிலீஸுக்கு தயாராக இருக்கும் படத்தில் ஜகமே தந்திரமும் ஒன்று. கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இந்த படத்தின் படப்பிடிப்பும் முழுவதும் ஏற்கனவே முடிந்து விட்டது. இதைத்தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்திலும் நடித்து வருகிறார்.