நடிகர் விவேக் மறைவிற்கு திரையுல பிரபலங்கள் பலரும், இதயப் பூர்வமான அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மறைந்த நடிகர் விவேக் உடலானது, விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. அவரது இறப்புக்கு பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என ஏராளமானோர் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த்

சின்னக்கலைவாணர், சமூக சேவகர், என்னுடைய நெருங்கிய இனிய நண்பர் விவேக் அவர்களுடைய மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. ’சிவாஜி’ படப்பிடிப்பில் அவருடன் நடித்த ஒவ்வொரு நாட்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள். அவரை பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். விவேக்கின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

நடிகர் கமல்ஹாசன்

நடிகனின் கடமை நடிப்பதோடு முடிந்தது என்று இருந்து விடாமல், தனக்குச் செய்த சமூகத்துக்கு தானும் ஏதேனும் செய்ய விரும்பியவர், செய்தவர் நண்பர் விவேக். மேதகு கலாமின் இளவலாக, பசுமைக் காவலராக வலம் வந்த விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு. 

நடிகர் விஜயகாந்த்

நடிகர் விவேக்கின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகிற்கும் பேரிழப்பு.

நடிகர் சூர்யா

மனதில் விதைத்த சிந்தனைகள் வழியாக தலைமுறைக்கும் எங்கள் நினைவில் வாழ்வீர்கள் விவேக் சார்.

கவிஞர் வைரமுத்து

சிரிப்பை நிறுத்திய சின்னக் கலைவாணர். எனது நண்பர் மறைந்துவிட்டார் என்று சொல்வதா? அல்லது சிரிப்பு செத்துவிட்டது என்று சொல்வதா?

நடிகர் நாசர்

அவரை இழந்து நாம் தவிப்பதைப்போல் பல லட்ச மரங்கள் அவர் இல்லாமல் தவிக்கப்போகிறது.
  
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்

நடிகர் விவேக் மறைவை நம்பமுடியவில்லை. அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும். திரைத்துறையில் மக்களை பல ஆண்டுகள் மகிழ்த்து வந்த நீங்கள் என்றென்றும் எங்கள் நினைவுகளில் இருப்பீர்கள்.

நடிகர் தனுஷ் 

“விவேக் சார்” எனக் குறிப்பிட்டு மூன்று இதயம் உடைந்த எமோஜிக்களையும் இணைத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் அட்லி

நடிகர் விவேக்கின் இழப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை.

இயக்குநர் சேரன்

எல்லோர் இதயங்களிலும் நீங்கள் வாழ்வீர்கள் விவேக் சார், திரை உலகம் உள்ளவரை உங்கள் புகழ் இருக்கும்.

நடிகர் சத்யராஜ்

சிரிக்கவும் சிந்திக்கவும் வச்சு சின்ன கலைவாணர்ன்னு பேர் வாங்குன என் அன்புத் தம்பி விவேக், எப்படி சொல்றது? அவரது மறைவுக்குங்கற வார்த்தையை பயன்படுத்த மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அவர் நம்மளோட இல்லாம போனதுக்கு என்னுடைய ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிச்சுக்குறேன். வார்த்தைகளால அவரது குடும்பத்துக்கோ, ரசிகர்களுக்கோ, கலையுலகத்துக்கோ, எனக்கோ ஆறுதல் சொல்றது முடியாத காரியம்.

நடிகர் எஸ்.ஜே.சூர்யா

மாபெரும் கலைஞனே மனம் உடந்து போனேன்.. பெரிய இழப்பு.. என்ன நடக்கிறது??? ஆத்மா சாந்தியடையட்டும்.

நடிகர் ராகவா லாரன்ஸ்

நடிகர் விவேக்கின் மறைவு திரைத்துறைக்கு மட்டுமல்லாது, சமூகத்திற்கே பேரிழப்பு

உதயநிதி ஸ்டாலின் 

அண்ணன் விவேக் அவர்களின் மரணம் தாங்கிக்கொள்ள முடியாத பேரதிர்ச்சி. கலைஞரின் அன்பை பெற்றவர். தலைவர் அவர்களின் நண்பர். 'மனிதன்' படத்தில் என்னுடன் நடித்தார், வழிநடத்தினார். திரையிலும் நிஜத்திலும் சமூகம்-சூழலியலுக்காக தொடர்ந்து குரல்கொடுத்தவர். அண்ணனின் மரணம் தமிழகத்துக்கு பேரிழப்பு. தன் வாழ்நாள் முழுவதும் நேர்மறை எண்ணங்களையும், உற்சாகத்தையும் விதைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய அண்ணனின் இழப்பை குடும்பத்தார் எப்படி தாங்கிக்கொள்வர்? ஆழ்ந்த இரங்கல். அவரது குடும்பம், நண்பர்கள், ரசிகர்களுக்கு என் ஆறுதல். சின்னக்கலைவாணர் விட்டு சென்ற சமூக பணிகளை நாம் தொடருவோம்.

நடிகர் பார்த்திபன் 

சமூகத்தின் மீது தீரா நேசம் கொண்ட நண்பர் விவேக் அவர்களின் பிரிவு, வார்த்தைகளில் சொல்ல முடியாதத் துயர்.

நடிகர் சூரி

நடிகர் விவேக்கின் மறைவுக்கு கோடிக்கணக்கான மரங்களும் கண்ணீர் சிந்தும்.

நடிகர் யோகி பாபு 

தமிழ் சினிமாவில் ஒரு காமெடி நடிகனை மற்றோரு காமெடி நடிகன் தூக்கிவிடவேண்டுமென்று நினைக்கும் ஒரே நடிகர் விவேக்.

நடிகர் மயில்சாமி

ஊர் ஊராகச் சென்று மரங்கள் நட்டு வந்தார். யாருக்கு உதவி என்றாலும் முதலில் என்னிடம் சொல்லுங்கள் என்று கூறுவார் என நினைவு கூர்ந்துள்ளார்.

இசையமைப்பாளர் டி.இமான்

எங்கள் விவேக் இல்லை என்ற உண்மையை ஏற்க என் இதயமும் ஆத்மாவும் நம்ப மறுக்கின்றது. ஒரு அசாதாரண கலைஞரையும், மனிதனையும் நாம் இழந்தோம், அவரது குடும்பத்திற்கு எனது மனமார்ந்த இரங்கல்.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் 

ஒரு சமூக செய்தியை எப்போதும் தனது காமெடியில் இணைத்த எங்கள் காலத்தின் சிறந்த நகைச்சுவை நடிகர் விவேக். நான் எப்போதும் அவரது டைஹார்ட் ரசிகன். விவேக் நீங்கள் எங்கள் இதயங்களில் என்றென்றும் வாழ்வீர்கள்.

நடிகை கஸ்தூரி உருக்கம் 

அதிர்ச்சியாக இருக்கிறது. இது நடந்திருக்கக் கூடாது. என்னால் பேச முடிவில்லை.

சாலமன் பாப்பையா 

திரைத்துறை மட்டுமல்ல பகுத்தறிவு சிந்தனைகளுக்கும் நல்ல நகைச்சுவைகளை பேரிழப்பு.

கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி 

“அரியும் சிவனும் ஒண்ணு, அத அறியாதவன் வாயில மண்ணு - நடிகர் விவேக். அவர் வாழ்க்கையை வாழ்ந்த விதத்திலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. நகைச்சுவையால் இந்த சமூகத்திற்கும், லட்சக் கணக்கான மரங்களை நட்டு இயற்கைக்கும் நிறைய செய்துள்ளார். வாழ்க்கையை வழி நடத்த சிறந்த எடுத்துக்காட்டு. 

நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா, கார்த்தி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் நடிகர் விவேக் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். மேலும் இயக்குநர் ஷங்கர், நடிகர்கள் நாசர், சூரி, இமான் அண்ணாச்சி, கவுண்டமணி, நடிகை ஆர்த்தி, இந்துஜா உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.