சிரிப்பும் சிந்தனையும் கலந்த நகைச்சுவையை திரையில் பரப்பி சின்னக் கலைவாணர் என கொண்டாடப்பட்டவர் நடிகர் விவேக். 

நடிகர் விவேக்கிற்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை வடபழனியில் இருக்கும் சிம்ஸ் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் இன்று அதிகாலை 4.35 மணிக்கு அவர் சிகிச்சை பலனிறி உயிரிழந்தார். இந்த செய்தி இடி விழுந்தது போல் இருந்தது. ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் அதிர்ச்சிக்கு உள்ளாயினர். நடிகரும், சமூக ஆர்வலருமான விவேக்கின் மறைவு திரையுலகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கே இது பேரதிர்ச்சி செய்தியாக அமைந்துள்ளது.

திரைப்படங்கள் மூலம் சீர்திருத்த கருத்துகளை பரப்பி வந்த விவேக் சின்ன கலைவாணர் என அழைக்கப்படுகிறார். திரைப்படத்தோடு அதை நிறுத்திக் கொள்ளாமல் சுற்று சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு போன்ற சமூக சேவை பணிகளில் ஈடுபட்டுவந்தார்.

மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாமின் கனவை நிறைவேற்றும் வகையில் கிரீன் கலாம் அமைப்பு மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை இலக்காக வைத்து செயல்பட்டு வந்தார். இதுவரை பள்ளிகள், கல்லூரிகள், கிராமங்கள். சாலையோரங்களில் 33 லட்சத்து 23 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு இருக்கிறார்.

சிரிப்பை நிறுத்திய சின்ன கலைவாணர் கடைசி நொடி வரை மனிதர்களை சிந்திக்க சொல்லி,மரம் தொடங்கி மனிதம் வரை இந்த தமிழ் சமூகத்தில் விழிப்புணர்வை விதைத்து சென்ற கலைஞன் விவேக். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது நம் கலாட்டா. இறைவனை மகிழ்விக்க சென்றுள்ளார் நடிகர் விவேக்.