“வாக்கு எந்திரங்கள் இருக்கும் மையங்களுக்குள் 31 நபர்கள் லேப்டாப்புடன் நுழைந்ததால்” பதறிப்போன திமுக, தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை குறைந்து உள்ளதாகக் குற்றம்சாட்டி உள்ளது. 

தமிழகத்தில் 16 வது சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் கடந்த 6 ஆம் தேதி நடந்து முடிந்தது. 

வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் பாதுகாப்பு மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன. அங்கு, 24 மணி நேரங்களும் வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பாதுகாக்க 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படியான நிலையில், வாக்கு பதிவு முடிந்த அன்றே, தூத்துக்குடி தொகுதி வாக்கு எந்திர மையங்களுக்கு கண்டெய்னர் லாரிகள் வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, திமுக அப்போதே பிரச்சனையை எழுப்பி இருந்தது.

அதே போல், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட, “பண்ருட்டி சட்டமன்ற தொகுதி வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அண்ணா பொறியியல் கல்லூரியில், மடிக்கணினி அறிவியல் தொடர்புடைய 3 பேருக்கு அனுமதி பாஸ் வழங்கி உள்ளதாக” தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

“அந்த வளாகத்தில் தேர்தல் அலுவலர், தேர்தல் பணியாளர்கள், பாதுகாப்பு படையினர் தவிர யாரும் உள்ளே நுழைய முடியாது. அப்படியிருக்கையில் கைதேர்ந்த 3 கணினி நிபுணர்களை வளாகத்திற்குள் அனுமதித்திருக்கிறார்கள்” என்றும், அவர் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

குறிப்பாக, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இன்னும் 16 நாட்களே உள்ள நிலையில், “ராமநாதபுரத்தில் வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அண்ணா பல்கலை பொறியியல் கல்லூரிக்குள் நேற்று 31 நபர்கள் லேப்டாப்புடன் நுழைந்து உள்ளதாக” திமுகவினர் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளனர்.

அத்துடன், “லேப்டாப்புடன் வந்தது கல்லூரி பேராசிரியர்கள் என்றும், அவர்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்த வந்ததாகவும் கூறுவது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல” என்றும், கூறியுள்ளனர். 

மேலும், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் திமுக தரப்பில் இருந்து புகார் அளித்ததின் காரணமாக, “ஆசிரியர்களை வேறு இடத்தில் இருந்து ஆன்லைன் வகுப்பு எடுக்கும் படி” மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. 

இதனால், ஆன்லைன் வகுப்புகளை வீட்டில் இருந்தே எடுக்கும் வசதி ஆசிரியர்களுக்கு இருக்கும் போது, ஆசிரியர்கள் ஏன் இங்கு வர வேண்டும்” என்று, திமுக தரப்பினர் கேள்வி எழுப்பி உள்ளது.

இது தொடர்பாக சென்னையில் தலைமைத் தேர்தல் ஆணையரை சந்தித்து பேசிவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த திமுக நிர்வாகிகளான பொன்முடி, ஆர்.எஸ் பாரதி, ஆ. ராசா உள்ளிட்டோர், தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை குறைகிறது” என்று, குற்றம்சாட்டி உள்ளனர்.

முக்கியமாக, “வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் வெளி நபர்கள் அனுமதிக்கப்படுகின்றனர் என்றும், இதனால் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை குறைகிறது” என்றும், அவர்கள் குறிப்பிட்டனர். 

“வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் வெளி நபர்கள் அனுமதிக்கக்கூடாது” என்றும், திமுக தரப்பில் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.