இதயம் பலவீனமாக இருந்ததால் சிகிச்சைகள் பலன் அளிக்காமல், சிரிப்பை நிறுத்திக்கொண்டார் சின்ன கலைவாணர் விவேக்.

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக், நேற்றைய தினம் வீட்டில் பேசிக்கொண்டு இருந்தபோது, திடீரென்று அவருக்கு நெஞ்சுவலியும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. இதனால், அவர் அங்கேயே திடீரென்று மயக்க நிலைக்கு சென்றார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், உடனடியாக அவரை மீட்டு வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, நடிகர் விவேக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்குத் தீவிரமாக சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவருக்கு இதய செயல்பாடு குறைந்ததாகத் தெரிகிறது. 

இதனையடுத்து, விவேக்கின் இதயத்தை முழுமையாக செயல்பட வைக்க, அவருக்கு எக்மோ கருவி பொருத்தி இன்னும் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இப்படியாக அவருக்கு தொடர்ந்து சிகிசிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை 4.35 மணி அளவில் நடிகர் விவேக், சிகிச்சை பலனின்றி அங்கேயே உயிரிழந்தார். 

இதனால், நடிகர் விவேக்கின் குடும்பத்தினர் மட்டுமின்றி, தமிழ் திரையுலகினரும், ரசிகர் பெருமக்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். 

இதனையடுத்து, நடிகர் விவேக் உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. அவரது இறப்புக்கு தலைவர்கள், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருவதோடு, பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதனிடையே, “நடிகர் விவேக்கிற்கு ஏற்பட்ட மாரடைப்புக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டது காரணமல்ல” என்று, நேற்று மாலை தமிழ்நாடு சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.