நகைச்சுவை நடிகர் விவேக் இன்று காலை தனது குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருக்கும் போது திடீர் என மயங்கி விழுந்ததால், வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக சிம்ஸ் மருத்துவமனை அளித்துள்ள விளக்கத்தில், சுயநினைவு இல்லாத நிலையில் குடும்பத்தினரால் நடிகர் விவேக் இன்று காலை 11 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு வல்லுனர்கள் குழுவால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார். உடல்நலக்குறைவுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டது காரணமல்ல என மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர் கூறுகையில் நடிகர் விவேக்கிற்கு அவரது வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கிய அவரை அவரது மனைவியும் , மகளும் அழைத்து வந்தார்கள். அப்போது அவருக்கு அவசர உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் மருத்துவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க இயலாத நிலையில் இருந்தார்.

இதையடுத்து ஆஞ்சியோ செய்ததில் அவருக்கு இடது கரோனரி ஆர்டரியில் 100 சதவீதம் அடைப்பு இருந்தது. பொதுவாக வலது கரோனரி ஆர்டரி, இடது கரோனரி ஆர்டரி என இரண்டு இருக்கும்.

ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மூலம் அவருக்கு ரத்தக் குழாய்களில் இருந்த அடைப்பு முழுவதும் நீக்கப்பட்டது. இதையடுத்து அவரது இதயத்தை சீராக இயங்க வைக்க எக்மோ கருவி பொருத்தப்பட்டுள்ளது. தற்போது ஆபத்தான நிலையில்தான் உள்ளார். 24 மணி நேரம் கழித்தே சொல்ல முடியும் என்றார் மருத்துவர்.

நடிகர் விவேக்கின் உடல் நிலையை அறிந்த ரசிகர்கள், அவருக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர். நம்மை மகிழ்வித்த மகா கலைஞனுக்கு எதுவும் ஆகாது என்று பதிவு செய்தும் வருகின்றனர்.