15, 16 வயதுடைய 3 சிறுமிகளை அடுத்தடுத்து கடத்திய 3 பேர், சிறுமியை கட்டாய திருமணம் செய்துகொண்டதாக அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளனர். 

சென்னையில்தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது. 

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி என்ற பெண்ணின் 15 வயதான மகள், தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அத்துடன், அவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார்.

தற்போது, கொரோனா காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால், அந்த சிறுமி வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

இப்படியான நிலையில், கடந்த 8 ஆம் தேதி வீட்டில் இருந்த சிறுமி மாயமாகி உள்ளார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அந்த பகுதி முழுவதும் தேடிப் பார்த்தனர். சிறுமியின் தோழிகள் வீட்டிலும் சென்று பார்த்து உள்ளனர். இப்படியாக, எங்குத் தேடியும் சிறுமி கிடைக்காத நிலையில், பயந்து போன சிறுமியின் பெற்றோர், அங்குள்ள தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதே போல், தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் என்பவரும், தன்னுடைய 16 வயது மகளை காணவில்லை என்றும், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அத்துடன், பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சசிகலா என்ற பெண்ணும், “தன்னுடைய 16 வயது மகளை காணவில்லை” என்று, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இப்படியாக, ஒரே காவல் நிலையத்தில், 15, 16 வயதுடைய 3 சிறுமிகளை அடுத்தடுத்து மாயமானது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசயம் ரொம்ப சீரியஸ் என்பதைப் புரிந்துகொண்டு, உடனடியாக வழக்குப் பதிவு செய்து, தீவிரமான விசாரணையில் இறங்கினர்.

இது தொடர்பாக காவல் ஆய்வாளர் பிரியதர்ஷினி தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

இந்த விசாரணையில், இந்த சிறுமிகள் 3 பேரும் இருக்கும் இடத்தை போலீசார் கண்டுபிடித்து அதிரடியாக அங்குச் சென்று அவர்கள் 3 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

அதனையடுத்து, மீட்கப்பட்ட சிறுமிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமிகள் கூறிய தகவல்களின் அடிப்படையில், அந்த பகுதியைச் சேர்ந்த 20 வயதான சரவணன், 21 வயதான முகமது, 28 வயதான ஆஷிஷ் ஷர்மா ஆகிய 3 பேரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். 

மேலும், கைது செய்யப்பட்ட 3 இளைஞர்களும் ஒன்றிணைந்து அந்த 3 சிறுமிகளையும் ஆசை வார்த்தைகளைக் கூறி, கட்டாய திருமணம் செய்து கொண்டதும் தெரிய வந்தது. இதனையடுத்து, 3 இளைஞர்கள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களை போலீசார் சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.