சென்னை குரோம்பேட்டை எம்ஐடி மேம்பாலத்தில் இருந்து இளைஞர் ஒருவர் விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி, நெஞ்சை பதைபதைக்க வைத்து உள்ளது.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் 34 வயதான மாரிமுத்து என்ற இளைஞர், சென்னை அமைந்தகரையில் உள்ள பிரியாணி கடையில் வேலை பார்த்து வந்தார். 

இப்படியாக, கடந்த சில மாதங்களாக குறிப்பிட்ட பிரியாணி கடைசியில் வேலை பார்த்து வந்த மாரிமுத்து, கடந்த 2 நாள்களுக்கு முன்பு பிரியாணி கடை உரிமையாளரிடம் ஊருக்குச் செல்வதாக கூறி லீவு வாங்கி இருக்கிறார். 

ஆனால், கடை ஓனர் லீவு கொடுத்த பிறகும், ஊருக்குச் செல்லாமல் தாம்பரம் பகுதியில் மாரிமுத்து சுற்றித் திரிந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், இன்று பட்டப் பகலில் சென்னை பல்லாவரம் அடுத்து உள்ள குரோம்பேட்டை எம்ஐடி மேம்பாலத்திலிருந்து, ஜிஎஸ்டி சாலையில் சென்றுகொண்டிருந்த கார் மீது, மாரிமுத்து திடீரென்று வந்து விழுந்தார். 

அப்போது, அந்த கார், சற்று தூரம் சென்று நின்றது. அந்த கார் நின்றதும், அந்த காரிலிருந்து அவர் கீழே விழுந்தார். அப்போது, ரத்த வெள்ளத்தில் அவர் சாலையில் மயங்கிய நிலையில் கிடந்தார். மாரிமுத்து மேம்பாலத்தில் இருந்து கீழே விழும்போது, இளைஞர் ஒருவர் கீழே விழுகிறாரா என்று, பொருட்படுத்தாமல் பலரும், தங்களது வாகனத்தில் அந்த சாலையை கடந்துச் சென்றுகொண்டே இருந்தனர்.

அப்போது, அந்த வழியாக நடந்து சென்றுகொண்டிருந்த ஒரு சிலர் மட்டுமே ஓடி வந்து, அவருக்கு முதலுதவி செய்தனர். 

அத்துடன், உடனடியாக, இது குறித்து 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு சக வாகன ஓட்டிகள் அனுப்பி வைத்தனர். அங்கு, அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், உயர் சிகிச்சைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு, அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், “மாரிமுத்து, குடும்பத் தகராறு காரணமாகத் தற்கொலைக்கு முயன்றதாக” போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனினும், இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், குரோம்பேட்டை எம்ஐடி மேம்பாலத்தில் இருந்து மாரிமுத்து, கீழே காரின் மீது விழுந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி, நெஞ்சை பதைபதைக்க வைத்து உள்ளது. தற்போது, இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.