நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் தங்களது அபார திறமையால் ஜொலித்தனர். அதில் ஒருவர் கொல்கத்தா அணிக்கு விளையாடிய வருண் சக்கரவர்த்தி. ஐபிஎல் 13ஆவது சீசனில் சிறப்பாகப் பந்துவீசி இதுவரை 12 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார் வருண் சக்ரவர்த்தி. குறிப்பாக, 42ஆவது லீக் போட்டியில் ஐந்து விக்கெட் வீழ்த்தி அசத்தினார். 

29 வயதாகும் வருண் சக்ரவர்த்தி பந்து வீச்சாளராக இருந்தாலும் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனாகவே கிரிக்கெட் பழகியவர். ஆனால், விக்கெட் கீப்பர் பணிக்குப் பல போட்டிகள் இருந்ததால், கடந்த 2018-ம் ஆண்டில்தான் சுழற்பந்துவீச்சுக்கு மாறிப் பயிற்சி எடுத்தார். இதுவரை முதல்தரப் போட்டிகளில் 12 டி20 போட்டிகளில் மட்டுமே வருண் சக்ரவர்த்தி விளையாடியுள்ளார். ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியில் இவர் இடம் பெற்றிருந்தாலும், காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார். 

கொல்கத்தா அணி தங்கள் பயிற்சி புகைப்படங்கள் சிலவற்றை சமீபத்தில் ட்விட்டரில் பதிவிட்டனர். இதில் வருண் கையில் தளபதி விஜயின் படத்தை பச்சை குத்தியிருந்தார். இதனை கவனித்த தளபதி ரசிகர்கள் இந்த புகைப்படத்தை ட்ரெண்ட் செய்தனர். தளபதி விஜய்யை நேரில் சந்திக்க விரும்புவதாக பல பேட்டிகளில் வருண் கூறியிருந்தார். தற்போது வருணின் கனவு நிஜமாகியுள்ளது. தளபதியை சந்தித்து வருண் பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னனாகவும், ரசிகர்களின் உடன்பிறவா அண்ணனாகவும் திகழ்பவர் தளபதி விஜய். விஜய் எனும் மூன்றெழுத்து மந்திரம், தமிழ் திரையுலகின் தாரக மந்திரமாக ஒலிக்கிறது. படத்திற்கு படம் அவரது பாக்ஸ் ஆபீஸ் வசூல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பல இயக்குனர்களின் ஆதர்ஷ நாயகனாக இருந்து வருகிறார். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். XB பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, சேத்தன், கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. 

கொரோனா ஊரடங்கால் மாஸ்டர் ரிலீஸை தள்ளிப்போடும் நிலை உருவானது. மாஸ்டர் திரைப்படம் நிச்சயம் திரையரங்கில் தான் வெளியாகும் என்ற ருசிகர செய்தியை தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ உறுதி செய்தார். தீபாவளி விருந்தாக மாஸ்டர் படத்தின் டீஸர் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. மாஸ்டர் டீஸரை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியாகினர். அதிக பார்வையாளர்களை ஈர்த்து ட்ரெண்டாகி வருகிறது இந்த டீஸர்.