சென்னையில் செய்தி வாசிப்பாளர் பணிக்கு ஆட்கள் தேவை என்று போலியாக ஒரு விளம்பரத்தை செய்து, அந்த விளம்பரத்தை நம்பி வந்த பெண் அணிந்திருந்த 5 பவுன் நகையை நூதன முறையில் கொள்ளையடித்த மோசடி தம்பதியினரை போலீசார் அதிரடியாக கைது செய்து உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதான மினிமோல் என்பவர், சினிமா மீது கொண்ட ஆசையால் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றும், டி.வி. யில் செய்தி வாசிப்பாளராக ஆக வேண்டும் என்கிற ஆசையிலும், சென்னைக்கு வந்த பல தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்திலும் ஏறி இறங்கி உள்ளார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு OLX என்ற ஆன்லைன் ஆப்பில், “சினிமா வாய்ப்பிற்கு ஆட்கள் தேவை” என்கிற விளம்பத்தைப் பார்த்துள்ளார். குறிப்பிட்ட அந்த விளம்பரத்தில் உள்ள தொடர்பு எண்ணிற்குத் தொடர்பு கொண்டு, மினிமோல் பேசி உள்ளார். அப்போது, மறு முனையில் பேசியவர்கள், “நாங்கள் சினிமா மற்றும் செய்தி வாசிப்பு நிறுவனத்தில் ஆட்களை சேர்த்து விடும் ஏஜென்சி” என்று கூறியுள்ளனர்.

மேலும், “சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல செய்தி நிறுவனத்தில் தற்போது பணிபுரிய ஆட்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும்” அவர்கள் கூறியுள்ளனர்.

அத்துடன், “நீங்கள் டி.வி. யில் செய்திவாசிப்பாளர் ஆக வேண்டும் என்றால், அதில் பங்கேற்கலாம்” என்றும், இளம் பெண் மினிமோலிடம் ஆசை வார்த்தைகள் கூறி உள்ளனர்.

அப்போது பேசிய இளம் பெண் மினிமோல், “துரைப்பாக்கத்திற்கு வருவதற்கு எனக்கு வழி தெரியாது” என்று சொல்லி உள்ளார். இதன் காரணமாக, தங்கள் அலுவலக உதவியாளர் தீபக் என்பவரை அனுப்பி, மினிமோலை அழைத்து வர வைத்து உள்ளது அந்த கும்பல்.

அதன் படி, தீபக் என்பவர் இளம் மினிமோலை, அங்குள்ள தனியார் ஹோட்டலுக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு, மினிமோலிடம், ராவின் பிஸ்ட்ரோ என்பவரும், தீபா என்ற பெண்ணும் “தாங்கள் தம்பதிகள் என்றும், நாங்கள் ஏஜென்சி மேலாளர் என்றும் அறிமுகம் ஆகி” உள்ளனர். 

அதன் தொடர்ச்சியாக, அவர்கள் இருவரும் மினிமோலிடம் நேர்காணல் செய்து உள்ளனர். அத்துடன். அங்கிருந்த ஒரு கேமிராவை காட்டி, மேக்கப் மற்றும் ஸ்கிரீன் டெஸ்ட் எடுக்க வேண்டும் என்றும், அவர்கள் கூறி உள்னர்.

அந்த தருணத்ததில், மேக்கப் போடும் போது கழுத்தில் மினிமோல் தங்க நகை அணிந்திருந்தார். ஆனால், அந்த தம்பதிகளோ, “மேக்கப் போடும் போது தங்க நகைகள் அணிந்திருந்தாக கூடாது” என கூறி, உள்ளனர். இதனால், மினிமேல் தான் அணிந்திருந்த நகையை கழற்றி வைத்து விட்டு, முகம் கழுவ அங்கிருக்கும் கழிவறைக்குச் சென்று உள்ளார். 

அப்போது, சட்டென்று சுதாரித்த அந்த மோசடி கும்பல், மினிமோல் சென்ற கழிவறையின் வெளி பக்கம் தாழ்ப்பாள் போட்டு விட்டு, தொலைக்காட்சி சத்தத்தைச் சற்று அதிகமாக வைத்து விட்டு அங்கிருந்து, தப்பி ஓடி உள்ளனர். ஆனால், மினிமோல் அங்கிருந்து வெளியே வர முடியாமல் நீண்ட நேரமாக சத்தம் போட்டு உள்ளார். ஒரு கட்டத்திற்குப் பிறகு, நீண்ட நேரம் ஆன பிறகு, இளம் பெண்ணின் சத்தம் கேட்டு, அங்கிருந்த பணியாளர்கள், அந்த பெண்ணை அங்கிருந்து மீட்டனர்.

அப்போது தான், தான் ஏமாற்றப்பட்டது அவருக்குத் தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்கப் பதிவு செய்த போலீசார், அங்கள்ள சிசிடிவி காட்சிகளைப் பெற்று, தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். 

இந்த விசாரணையில், பாலவாக்கம் குப்பம் பகுதியில் பதுங்கியிருந்த தேனி பண்ணையாபுரம் பகுதியைச் சேர்ந்த 30 வயது ராவின் பிஸ்ட்ரோ மற்றும் சென்னை திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த 38 வயதான தீபா என்கின்ற செண்பகவல்லி ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், “கணவன் - மனைவியான இருவரும் இது போன்று விளம்பரம் செய்து, மோசடியில் ஈட்டுப்பட்டது தெரிய வந்தது. கைதான தீபா கடந்த 8 வருடங்களுக்கு முன்பு, சென்னை திருவான்மியூர், நீலாங்கரை காவல் நிலையத்தில் ஊர் காவல்படையில் பணி புரிந்தவர் என்பதும், பணம் சம்பாதிக்கும் ஆசையில் OLX ல் செய்தி வாசிப்பாளர் மற்றும் சினிமாவில் நடிக்க ஆட்கள் தேவை என விளம்பரப்படுத்தி நூதன மோசடியில் ஈடுபட்டதும்” தெரிய வந்தது. இதனையடுத்து, அந்த மோசடி தம்பதிகள் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.