இந்த வருடத்துக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு கொரோனா பாதிப்பின் காரணமாக தாமதமானது. இந்தநிலையில் அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேருவதற்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக சட்டசபையில் தீர்மானம் சில தினங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது.

இதற்கு கவர்னர் ஒப்புதல் தாமதமானதால் மருத்துவ கலந்தாய்வு தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதற்கிடையில் கடந்த வாரம் கவர்னர் இதற்கு ஒப்புதல் அளித்தார். அதனைத் தொடர்ந்து கலந்தாய்வுக்கான ஆரம்பகட்ட பணிகள் விரைவுபடுத்தப்பட்டன.

ஆன்-லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான ஏற்பாடுகளை மருத்துவ கல்வி இயக்குனரகம் செய்து வருகிறது. அரசு பள்ளியில் படித்த 300 மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கு இந்த ஆண்டு வாய்ப்பு கிடைத்திருப்பதால் ஏழை மாணவர்களின் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சுமார் 5 ஆயிரம் மருத்துவ இடங்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான முதல்கட்ட கலந்தாய்வு விரைவில் தொடங்கப்பட உள்ளது. இன ஒதுக்கீடு மற்றும் உள் ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்களை சேர்ப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் நடந்தது.

அதனொருபகுதியாக, நேற்று முன்தினம் (நவம்பர் 16) 2020-21-ம் கல்வியாண்டு மருத்துவப் படிப்புக்கான தரவரிசை பட்டியலை நேற்று முன்தினம் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து கலந்தாய்வுக்கான பணிகள் தொடங்கின.

அரசு பள்ளிகளில் படித்து 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவப்படிப்பில் சேர இருக்கும் அனைத்து பிரிவு 951 மாணவ-மாணவிகளுக்கான கலந்தாய்வு இன்று (புதன்கிழமை) தொடங்கி நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) வரை நடைபெற இருப்பதாக மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் ஜி.செல்வராஜன் கூறியிருந்தார். அதன்படி இன்று (நவம்பர் 18) காலை சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் கலந்தாய்வு தொடங்கியது. தினந்தோறும் 500 மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இன்று 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அடிப்படையில் பயன்பெற இருக்கும் மாணவர்களின் தரவரிசை பட்டியலின்படி காலை 9 மணி முதல் 11 மணி வரை, 1 முதல் 151 தரவரிசையில் (நீட் தேர்வில் 664 மதிப்பெண் முதல் 249 மதிப்பெண் வரை) இருக்கும் மாணவர்களுக்கும், 11 மணியில் இருந்து, 152 முதல் 267 தரவரிசையில் (நீட் தேர்வில் 248 முதல் 190 மதிப்பெண் வரை) உள்ள மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

அதன் தொடர்ச்சியாக நாளை (வியாழக்கிழமை) 268 முதல் 633 தரவரிசையில் (நீட் தேர்வில் 189 முதல் 133 மதிப்பெண் வரை) இருக்கும் மாணவர்களுக்கும், நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) 634 முதல் 951 தரவரிசையில் (நீட் தேர்வில் 132 முதல் 113 மதிப்பெண் வரை) இருக்கும் மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடக்க இருக்கிறது. இவர்களுக்கான கலந்தாய்வு சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது.

மொத்தம் 34,424 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் 3,650 மருத்துவ இடங்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது. மாணவர்கள் தேர்வு செய்யும் கல்லூரிகளுக்கான சேர்க்கை ஆணையை, இன்று பிற்பகலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.