“வாங்கிய கடனுக்காக தமிழ்நாடு அரசு கடந்த 8 ஆண்டுகளில் கட்டிய வட்டித் தொகை மட்டும் ஒரு லட்சத்து 66 ஆயிரம் கோடி ரூபாய்” என்று, மத்திய தலைமை நிதி தணிக்கைக் குழு கூறியுள்ளது.

இந்தியாவே கடனில் தத்தளிக்கிறது என்பது நம் அனைவரும் அறிந்த ஒரு விசயம் தான். ஆனால், தமிழ்நாடும் கடனில் தத்தளிக்கிறது என்பதை, தேர்தல் நேரத்தில் அப்போது எதிர் கட்சியாக இருக்கும் தலைவர்கள் சுட்டிக்காட்டும் போதுதான் நம்மில் பலருக்கும் தெரிய வரும்.

ஆனால், இந்த முறை தமிழ்நாட்டின் கடன் குறித்த தகவல்களை மத்திய தலைமை நிதி தணிக்கைக் குழு தெரிவித்து இருக்கிறது.

மத்திய தலைமை நிதி தணிக்கைக் குழுவானது, ஒவ்வொரு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஆண்டு வரவு - செலவுகளை ஆய்வு செய்து, அதனைத் 
தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறது. 

அதன் படி, நாட்டில் வாழும் ஒவ்வொரு இந்திய குடிமகனும், தன்னுடைய மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் வரவு - செலவுகளை இதில், முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியும். 

அந்த வகையில், “தமிழ் நாடு அரசு வாங்கிய பல்வேறு கடன்களுக்குக் கடந்த 8 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 814.52 கோடி ரூபாயை வட்டியாக மட்டும் கட்டி இருக்கும்” அதிர்ச்சித் தகவல்கள் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தத் தகவல்கள் அனைத்தும், அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் https://cag.gov.in/en/state-accounts-report?defuat_state_id=88 என்ற இணையதள பக்கத்தில் மத்திய தலைமை நிதி தணிக்கைக் குழு பதிவேற்றம் செய்து உள்ளது.

அத்துடன், தமிழ் நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு கடன்களுக்குச் செலுத்த வேண்டிய வட்டித் தொகையானது 2013 - 12 ஆம் நிதியாண்டில் 13 ஆயிரத்து 30.53 கோடி ரூபாயில் இருந்து 2020 - 21 ஆம் நிதியாண்டில் 278 சதவீதம் உயர்ந்து, 36 ஆயிரத்து 311.47 கோடி ரூபாயாக மாறியது.

இந்த கொரோனா தாக்கத்தால் நடப்பு நிதியாண்டில் கட்ட வேண்டிய வட்டியான 36 ஆயிரத்து 311.47 கோடி ரூபாய்க்கு, தமிழ்நாடு அரசு நவம்பர் 2020 ஆம் ஆண்டு இறுதி வரை 14 ஆயிரத்து 181.51 கோடி ரூபாயை மட்டுமே கட்டி உள்ளது. 

இவற்றுடன், வரும் மார்ச் மாதத்திற்குள் மீதம் உள்ள 22 ஆயிரத்து 129.96 கோடி ரூபாய் அளவுக்கு வட்டி பணத்தை மட்டுமே கட்ட வேண்டிய சூழல் தமிழக அரசுக்கு ஏற்பட்டு உள்ளது.

மேலும், தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு ஒவ்வொரு குடும்ப அட்டை தாரருக்கும் 2,500 ரூபாய் வழங்கத் தமிழ்நாடு அரசு 5 ஆயிரத்து 604.84 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. 

அப்படி கணக்கீடு செய்தால், கடந்த 8 ஆண்டுகளில் தமிழ் நாடு அரசு கட்டிய வட்டித் தொகையைக் கொண்டு மட்டும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் 73 ஆயிரத்து 972 ரூபாய் வழங்க முடியும்.

குறிப்பாக, தமிழ் நாடு அரசின் செலவுக் கணக்கில் அரசு ஊழியர்களுக்கு வழங்கும் சம்பளம் முதலிடமும், அரசு பெற்ற கடனுக்கு வழங்கும் வட்டித் தொகை 2 ஆம் இடமும் பெற்று உள்ளன. 

2019 - 20 ஆம் நிதியாண்டில் தமிழ்நாடு அரசு, மாநிலம் முழுவதும் உள்ள பொது மக்களுக்கு வழங்கிய நலத் திட்டங்களுக்குச் செய்த செலவு 20 ஆயிரத்து 146.77 கோடி ரூபாய் ஆகும்.

அதே நேரத்தில், இதே நிதியாண்டில் பல்வேறு கடன்களுக்குச் செலுத்திய வட்டித் தொகை 31 ஆயிரத்து 980.19 கோடி ரூபாய் என்றும், அதில் கூறப்பட்டு உள்ளது. 

இந்த தொகையானது, பொது மக்களுக்கு வழங்கிய மானிய திட்டங்களை விட, அதிக தொகையைத் தமிழக அரசு வட்டியாகச் செலுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.