தமிழக சட்டமன்றத் தேர்தலில் சினிமா ஸ்டார்களின் நிலை மற்றும் டெபாசிட் இழந்த சினிமா பிரபலங்கள் யார் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.

2021 தமிழக சட்டமன்ற தேர்தலில், பல்வேறு கட்சிகளிலும் சினிமா பிரபலங்கள் பலரும் களம் கண்டனர். சினிமா பிரபலங்கள் களம் கண்டதால், பல தொகுதிகள் முக்கியம் பெற்றன.

எனினும், தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட திரைப் பிரபலங்கள் பலரும் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாமல், தோல்வியே அடைந்தனர். அதில், சிலர் டெபாசிட்டையும் இழந்தனர்.

அதன் படி, தமிழக சட்டப்பேரவை தேர்தலில் முதன் முறையாக போட்டியிட்ட நடிகர் கமல்ஹாசன், தோல்வியைத் தழுவினார். வாக்கு எண்ணிக்கையின்போது கமல்ஹாசன், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் இடையே கடும் போட்டி நிலவியது. எனினும், இறுதியில் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள வாக்கு எண்ணிக்கையானது, சில அயிரங்கள் மட்டுமே இருந்தது.
    
நடிகரும், இயககுநரமான நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட 37 ஆயிரம் வாக்குகளைப் பெற்று தோல்வியைத் தழுவினார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கே.பி. சங்கர் இதில் வெற்றி பெற்றுள்ளார். இதில், 2 ஆம் இடத்தை அதிமுக வேட்பாளர் கே.குப்பன் பெற்ற நிலையில், சீமான் 3 இடத்தை தக்க வைத்துக்கொண்டார்.

அதே போல், சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் நடிகை குஷ்பு, மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தார். எனினும், அவரும் அதிக வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 

இவரை போலவே, மயிலாப்பூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வேட்பாளராகக் களம் கண்ட நடிகை ஸ்ரீபிரியா, விருகம்பாக்கம் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் கவிஞர் சினேகன் ஆகியோரும், அதிக வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தனர்.

குறிப்பாக, சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் நகைச்சுவை நடிகர் மயில்சாமி மற்றும் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான் ஆகிய இரும் ஆயிரம் ஓட்டுக்கள் கூட பெறாமல், டெபாசிட்டை இழந்தனர்.

மிக முக்கியமாக ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஐ. பெரியசாமி மட்டுமே ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். அந்த தொகுதியில் பாமக வேட்பாளர் திலக பாமா 2 வது இடத்தைப் பிடித்தார். 

இதன் மூலமாகத் தமிழகத்தில் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்கிற பெருமையை திமுக வேட்பாளர் ஐ. பெரியசாமி மட்டுமே பெற்று உள்ளார்.

மேலும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 24 பேர், 50 ஆயிரம் வாக்குகள் முதல் ஒரு லட்சத்திற்கும் இடையிலான வாக்கு வித்தியாசத்திலேயே இந்த முறைற வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

அத்துடன், 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் 80 வேட்பாளர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். 10 ஆயிரம் முதல், 20 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் 57 வேட்பாளர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் 33 வேட்பாளர்கள் வெற்றி வாகை சூடியிருக்கிறார்கள். 

அதே போல், 100 முதல் ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் 8 பேர் வெற்றி பெற்று, தம்மை எதிர்த்த வேட்பாளருக்கு கடைசி வரை பீதியைக் கிளப்பி கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.