புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரே ஒரு பெண் மட்டும் வெற்றி பெற்று சட்டப்பேரவையை அலங்கரிக்க வருகிறார்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று உள்ளதால், என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரெங்கசாமி 2 வது முறையாக வருகிற 7 ஆம் தேதி முதலமைச்சராகப் பதவி ஏற்க உள்ளார். 

அதாவது, புதுச்சேரியில் 23 தொகுதிகளும், காரைக்காலில் 5 தொகுதிகளும், மாகே ஒரு தொகுதியும், ஏனாம் ஒரு தொகுதியும் சேர்த்து மொத்தம் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்குக் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. 

அதில், பாஜக வின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளிலும், பாஜக 9 தொகுதிகளிலும், அதிமுக 5 தொகுதிகளிலும் போட்டியிட்டன. 

அதே போல், காங்கிரஸ் கட்சியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், திமுக 13 தொகுதிகளிலும், விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன.

இதில், சில பெண் வேட்பாளர்களும் களம் இறங்கினர். இந்த தேர்தலில் 81.70 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. புதுச்சேரி மாநிலம் முழுவதும் 6 மையங்களில் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்ற நிலையில், 3 கட்டங்களாக முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அதன்படி, என்.ஆர் காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சியான பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்றது. 

அதே போல், காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி பெறும் 2 தொகுதிகளிலும், திமுக 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. ஆனால், இந்த தேர்தலில் 6 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்று உள்ளனர்.

இதில், கவனிக்கப்பட வேண்டிய விசயம் என்ன வென்றால், மிகவும் சொற்ப எண்ணிக்கையிலேயே பெண் வேட்பாளர்கள் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் களம் கண்டனர்.

இதில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பெண் வேட்பாளரான நெடுங்காடு தொகுதியில் போட்டியிட்ட சந்திர பிரியங்கா என்ற பெண் வேட்பாளர் மட்டுமே வெற்றி வாகை சூடியிருக்கிறார்.

அதாவது, நெடுங்காடு தனி தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் சந்திர பிரியங்கா போட்டியிட்ட நிலையில், முதல் சுற்றிலிருந்து தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை விட, சந்திர பிரியங்கா தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார். 

கடைசியாகப் பெண் வேட்பாளர் சந்திர பிரியங்கா 10,774 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். இதன் மூலமாக பாண்டிச்சேரியில் இருந்து ஒரே ஒரு பெண் எம்.எல்.ஏ. மட்டுமே இந்த முறை தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்  ஏ.மாரிமுத்து 8,560 வாக்குகள் மட்டுமே பெற்றார். 

அதே போல், திமுகவில் குறிப்பிட்ட அந்த தொகுதியில் சீட்டு கிடைக்காத விரக்தியில் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட்ட வி.விக்னேஸ்வரன் 5,606 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

குறிப்பிட்ட இந்த தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டு வந்தார் வி.விக்னேஸ்வரன். ஆனால், இந்த தொகுதியானது கூட்டணிக் கட்சியான காங்கிரஸூக்கு சென்று விட்டதால், கட்சியின் விதியை மீறி விக்னேஸ்வரன் சுயேச்சையாக போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், புதுச்சேரியில் வெற்றி பெற்ற சந்திர பிரியங்கா, மறைந்த முன்னாள் அமைச்சர் மு.சந்திரகாசு மகள் ஆவார். இவர், கடந்த 2016 சட்டப் பேரவைத் தேர்தலில் முதல் முறையாக என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது 2 வது முறையாக இந்த 2021 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று, தனிப் பெரும் பெண் ஆளுகையாக சட்டசபையை அலங்கரிக்கப்போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.