தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், தமிழ்நாடு அரசு மேலும் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் வரும் 6 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

கொரோனா வைரஸ் பரவலின் 2 வது அலையானது, தமிழகத்தில் கோர தாண்டவம் ஆடி வருகிறது. தமிழகத்தில் கொரோனாவின் முதல் அலையை விட , 2 வது அலையில் தான் தினசரி பாதிப்பு பண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிக அளவில் காணப்படுகின்றன.

அந்த வகையில், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 20 ஆயிரத்து 952 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தற்போது ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 258 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

அதே நேரத்தில், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு, நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே போல்,  
கொரோனா உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்த சூழ்நிலையில் தான், நடந்து முடிந்த 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அமோக வெற்றிப் பெற்று முதலமைச்சராக பொறுப்பு ஏற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “கொரோனா பரவலை தடுப்பதற்கு மிக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்” என்று, அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

இதனால், தற்போது தமிழகத்தில் இரவு 10 மணி முதல் அதிகாலை காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கும் அமலில் இருந்து வருகிறது. இப்படியான சூழலில் தான், கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வரும் 6 ஆம் தேதி காலை 4 மணி முதல் 20 ஆம் தேதி காலை 4 மணி வரை பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு தற்போது அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

- அனைத்து அரசு அலுவலகங்களும், தனியார் அலுவலகங்களும் அதிகபட்சம் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 

- பயணிகள் ரெயில், மெட்ரோ ரெயில், தனியார் பேருந்துகள், அரசு பேருந்துகள் மற்றும் வாடகை டாக்சி ஆகியவற்றில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பொது மக்கள் அமர்ந்து பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 

- 3000 சதுர அடி மற்றும் அதற்கு மேற்பட்ட பரப்பு கொண்ட பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில், மீண்டும் வலியுறுத்தப்பட்டு உள்ளது. 

- முக்கியமாக, வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கு அனுமதி தற்போது மறுக்கப்பட்டு உள்ளது. 

- தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இன்றி பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. 

- எனினும் திறந்திருக்கும் கடைகளில் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். 

- இந்த மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறி கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க அதிரடியாக தடை விதிக்கப்படுகிறது. 

- மருந்தகங்கள், பால் வினியோகம் போன்ற அத்தியாவசியப் பணிகள் வழக்கம் போல எந்த தடையுமின்றி செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது. 

- அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். 

- டீ கடைகள் பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி உண்டு. 
 - உணவகங்கள், டீ கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை.

- ஏற்கனவே, இறப்பு சார்ந்த நிகழ்வுகளில், 25 நபர்களுக்கு மிகாமல் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை என்று கூறப்பட்டு உள்ளது.

- அவசர மருத்துவ தேவைகளுக்கும், விமான நிலையம், ரெயில் நிலையம் செல்ல மட்டும் வாடகை ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும். 

- ஊடகம் மற்றும் பத்திரிகை துறையினர் தொடர்ந்து இரவிலும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

- பெட்ரோல் மற்றும் டீசல் பங்க்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

- முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்கள் உள்பட அனைத்து நாட்களிலும், திருமணம், திருமணம் சார்ந்த நிகழ்வுகள் (கலந்து கொள்வோர் எண்ணிக்கை 50 நபர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

- ஏற்கனவே ஆணையிட்டவாறு சனிக்கிழமைகளில், மீன் மார்க்கெட், மீன் கடைகள், கோழி இறைச்சி கடைகள் மற்ற இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி இல்லை. மற்ற நாட்களில் காலை 6 மணி முதல் 12 வரை செயல்பட அனுமதி உண்டு.