திமுக சார்பில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், அக்கட்சியின் சட்டப்பேரவை குழுத் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட இருக்கிறார்.

தமிழகத்தில் தற்போது நடந்து முடிந்திருக்கும் சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து உள்ளது.

இதில், தனிப் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்கிற நிலையில், 126 இடங்களில் திமுக வெற்றி பெற்று உள்ளது. இதனையடுத்து, முதலமைச்சர் பொறுப்பை எடப்பாடி பழனிசாமி, நேற்று ராஜினாமா செய்தார். 

சேலத்தில் இருந்து தனது ராஜினாமா கடிதத்தை, ஆளுநருக்கு எடப்பாடி பழனிசாமி அனுப்பி வைத்தார். 

இப்படியான சூழ்நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 6
மணிக்கு நடைபெறுகிறது. 

இந்தக் கூட்டத்தில், சட்டமன்றக் கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின், முறைப்படி தேர்வு செய்யப்படுகிறார். அதன் தொடர்ச்சியாகவே, மு.க.ஸ்டாலின், வரும் 7 ஆம் தேதி முதலமைச்சராக பதவி ஏற்கிறார்.

அத்துடன், கொரோனா பரவலால், ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்பு விழா நடைபெறும் என்றும், மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே குறிப்பழிட்டு இருந்தார். 

மேலும், முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு கூட்டணிக் கட்சித் தலைவர்களும், வாழ்த்துகளை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். தேர்தல் பரப்புரையில் திருச்சி பொதுக் கூட்டத்தில் அளித்த 7 உறுதி மொழிகளை முதலில் நிறைவேற்ற மு.க.ஸ்டாலின் தயாராகி வருவதாகவும், திமுக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக, அண்ணா அறிவாலயமும் விழாக்கோலம் பூண்டிருக்கிறது. இதே போல, பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களின் வருகையால் அண்ணா அறிவாலயம் தற்போது கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பரபரப்பாக காணப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.