‘வெற்றி நடை போடும் தமிழகம்’ என்ற தலைப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட வாரியாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் திருப்போரூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் அவர், ‘’கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, தன் குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்களுக்கு பதவி, அதிகாரம் கேட்க வேண்டும் என்பதற்காக தான் டெல்லிக்கு செல்வார். மக்களின் பிரச்சினைக்காக எல்லாம் டெல்லிக்கு செல்லமாட்டார். மத்திய அரசிடம் , பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததை கூட ஸ்டாலின் கிண்டலாக பேசுகிறார். 


காவல் உயர் அதிகாரியையே உதயநிதி ஸ்டாலின்  மிரட்டுகிறார் என்றால் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களின் நிலைமையை எண்ணிப்பார்க்க வேண்டும். ஆட்சியை காப்பாற்றுவதற்கு இன்னும் 5 ஆண்டுகளா இருக்கிறது? இன்னும் 2 மாதங்களில் தேர்தல் வர இருக்கிறது. நாங்கள் ஆட்சியை பெரிதாக நினைக்கவில்லை. மக்களைதான் பெரிதாக நினைக்கிறோம். மக்கள் தான் எஜமானர்கள். 


திமுக கட்சியல்ல. அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அந்த கம்பெனியில் ஸ்டாலின் தான் சேர்மன், குடும்ப உறுப்பினர்கள்தான் டைரக்டர்கள். வேறு யாரையும் டைரக்டராக போட மாட்டார்கள்.

அ.தி.மு.க.வை பொறுத்தவரைக்கும் சாதாரண தொண்டன் கூட முதலமைச்சராக வர முடியும். இது ஒரு ஜனநாயக கட்சி. வேறு எந்த கட்சியிலாவது வர முடியுமா?  தமிழக அரசு பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகிறது.” என்றார்