கோலிவுட்டில் நகைச்சுவை நடிகராக திகழ்பவர் நடிகர் யோகி பாபு. இவரது பெயர் இல்லாமல் திரைப்படங்கள் வெளியாவதே இல்லை என்றும் கூறலாம். சின்னத்திரை மூலம் அறிமுகமான இவர், தனது அயராத உழைப்பினால் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பிரபலமாக மாறியுள்ளார். 

இந்நிலையில் யோகிபாபு நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது. பொம்மை நாயகி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை பா. ரஞ்சித் அவரது நீலம் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். ஷான் இந்த படத்தை இயக்குகிறார். சுந்தர மூர்த்தி இசை, ஜெயரகு கலை இயக்கம், செல்வா படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். இன்று முதல் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கப்படுகிறது. இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து ட்ரெண்டாகி வருகிறது. 

சக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள திரைப்படம் பேய் மாமா. இந்த படத்தின் பாடல் மற்றும் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் ரிலீஸ் தகவல் இன்னும் தெரியவில்லை. இது தவிர்த்து ஜெகஜாலக்கில்லாடி, பிஸ்தா, சைத்தான் கா பச்சா, சதுரங்க வேட்டை2, பன்னிக்குட்டி, மண்டேலா, வெள்ளை யானை, கடைசி விவசாயி ஆகிய திரைப்படங்கள் யோகிபாபு கைவசம் உள்ளது. 

ட்ரிப் என்ற படத்தில் யோகிபாபு நடித்துள்ளார். டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கும் இந்த படத்தில் நடிகை சுனைனா மற்றும் கருணாகரண் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். த்ரில்லர் கலந்த நகைச்சுவை படமாக இந்த படம் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 5-ம் தேதி இந்த படம் வெளியாகவுள்ளது. 

இதுதவிர்த்து தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தில் நடித்துள்ளார் யோகிபாபு. மாரி செல்வராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பும் ஒட்டுமொத்தமாக முடிந்து ரிலீஸுக்கு காத்திருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் மிர்ச்சி சிவா நடிக்கும் சலூன் திரைப்படத்தில் இணைந்தார் யோகிபாபு.