தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர், ‘’ இப்போது ஊர் ஊராக சென்று மக்களிடம் குறை கேட்கிறார் ஸ்டாலின். ஆனால் அவர்கள் ஆட்சியில் இருந்தபோது ஏன் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை? ஸ்டாலின் மக்கள் கோரிக்கையை நிறைவேற்ற வில்லை. 


பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என்றால், அதை ஸ்டாலினுக்கு தான் கொடுக்க வேண்டும். நான் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் இல்லை என்று ஸ்டாலின் தொடர்ந்து கூறிவருகிறார். நான் எம்எல்ஏவாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் தானே?  மேலும், முதலமைச்சராக இருந்த அண்ணா மறைந்த பிறகு, கருணாநிதி எப்படி முதலமைச்சராக ஆனாரோ அதே போலத்தான் நான் முதலமைச்சராக ஆனேன் என்றும் கூறினார். 


ஒரு மாதத்தில் எடப்பாடி ஆட்சி முடியும் என்றார்கள். ஆனால் 4 ஆண்டுகளாக நல்லாட்சி கொடுத்திருக்கிறோம். வரும் தேர்தலிலும் இரட்டை இலை சின்னம் தான் மகத்தான வெற்றி பெற போகிறது” என்று பேசினார்.