திருவாரூர் மாவட்டத்தில், திமுக எம்.பி தயாநிதி மாறன், விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பிலான தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பிரச்சாரத்தில் அவர் பேசியது,’’ ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக, ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தி நான்கரை ஆண்டுகள் கடந்துவிட்டது. அதன்பின், ஒரு ஆணையம் அமைத்து நாடகம் நடத்தினார்கள். இன்றுவரை  அந்த ஆறுமுகசாமி ஆணையத்திலிருந்து எந்த அறிக்கை வரவில்லை. 


சசிகலாவின் காலில் விழுந்து முதல்வர் பதவிக்கு வந்தவர் இன்று இறைவன் அருளால் முதல்வர் ஆனேன் என்கிறார். வரம் கொடுத்தவர்கள் தலையிலேயே கை வைப்பது போல் , முதல்வராகி சசிகலாவிற்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிச்சாமிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அவர் ஒரு அனைகின்ற விளக்கு.


சசிகலா நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி சிறைக்கு செல்லவில்லை. ஜெயலலிதாவுடன் சேர்ந்து ஊழல் செய்ததற்காக சிறைக்கு சென்றவர். எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு சென்று வந்த பின்னர், தனிமை சிறையில் இருந்த சசிகலாவிற்கு எப்படி கொரோனா வந்தது என அவரது குடும்பத்தினரும் எழுப்புகின்றனர். இதில் நாங்கள் கேள்வி கேட்க முடியாது. 


பொங்கல் பரிசாக 2500 ரூபாய் கொடுத்தார்கள். அதன் பின்பு, மக்களுக்கு கொடுக்கும் 2500 ரூபாயை டாஸ்மாக் கடை மூலம் திரும்ப வந்து விடும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் , தமிழக மக்களை இழிப்புபடுத்தினார். இந்த கருத்தை அக்கட்சியில் யாரும் கண்டிக்கவில்லை. 


மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து செயல்பட்டால் பதவி பறிபோய்விடும் என்ற பயத்தில், விவசாயிகளுக்கு தீங்கு விளைவிக்கும் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக எடப்பாடி அரசு செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். “ என்றுள்ளார்.