சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது, முதல்வர் பழனிசாமி பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை குறித்து விளக்கம் அளித்துள்ளார். 


இது குறித்து அவர் பேசியதாவது, ’ எழுவர் விடுதலை குறித்து திமுக அரசியல் நாடகம் நடத்தி வருகிறது. ஆளுநரை நான் சந்திக்கும்போதெல்லாம் எழுவர் விடுதலை குறித்து வலியுறுத்துகிறேன். ஆனால் எழுவர் விடுதலை விவகாரத்தில் திமுக தவறான தகவல் பரப்பி வருகின்றது. பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் கருணை மனுவை கருணாநிதி அமைச்சரவை நிராகரித்தது. மூவரின் தண்டனையை குறைக்க ஜெயலலிதா அரசு தீர்மானம் நிறைவேற்றியது.

ஆனால் அதிமுக தீர்மானத்தினை எதிர்த்து அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் தான் எழுவர் விடுதலை பாதிக்கப்பட்டது” என்று பேசினார். 


மேலும் தனது டிவிட்டர் பக்கத்தில் , ‘’ சாந்தன், முருகன், பேரறிவாளனின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க 29.8.2011 அன்று தீர்மானம் நிறைவற்றியது.


19.2.2014 ல் மரண தண்டனையை ரத்து செய்து எழுவரையும் விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றியது என 7 தமிழர்கள் விடுதலைக்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது எங்கள் அரசு.

19.4.2000 அன்று நளினி தவிர மற்றவர்களின் கருணை மனுக்களை நிராகரித்ததோடு, மத்தியில் காங்கிரஸோடு கூட்டணியில் இருந்தும் கூட 7 பேர் விடுதலைக்காக சிறு துரும்பையும் அசைக்காத திமுக இன்று எழுவர் விடுதலைக்காக போராடுவதைப் போல தோற்றத்தை ஏற்படுத்தி தேர்தலில் அனுதாபம் பெற நாடகமாடுகின்றனர்.” என்று பதிவிட்டுள்ளார்.