லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் பொங்கலுக்கு தியேட்டரில் வெளியான படம் மாஸ்டர். கொரோனா அச்சுறுத்தலால் 8 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் திறக்கப்பட்டது. 

இருந்தாலும் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகாததால் மக்கள் தியேட்டருக்கு வருவதில் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. அதை மாற்றியமைத்தது விஜய்யின் மாஸ்டர். 100% இருக்கைகளை நிரப்பிக் கொள்ளலாம் என முதலில் அனுமதி வழங்கிய தமிழக அரசு பின்னர் மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி 50% இருக்கைகளுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. ஆனாலும் மாஸ்டர் படம் நல்ல வசூலைப் பெற்றிருப்பதாக திரையுலகினர் கொண்டாடினர்.

விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்டோரின் நேர்த்தியான நடிப்பு, கதாபாத்திர தேர்வு, படத்தின் கதை, எடிட்டிங் உள்ளிட்ட பல காரணங்கள் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்கு காரணம் என விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் மாஸ்டர் படத்தின் எடிட்டர் பிலோமின் ராஜூக்கு திவ்ய பிரதீபாவுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தியுள்ளார்.

பிலோமின் ராஜ் லோகேஷ் கனகராஜ் உடன் மாநகரம் படத்தில் இருந்தே பயணித்து வருகிறார். படத்தின் இயக்குனர் தனது கற்பனையில் உதிக்கும் கதையை படமாக்கினாலும் அதை திரையில் காட்சியாக கடத்துவது எடிட்டர் தான். அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் - பிலோமின் ராஜ் கூட்டணிக்கு தொடர்ந்து மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

திருமண பந்தத்தில் நுழையும் பிலோமின் ராஜுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறது நம் கலாட்டா.