“திமுக அரசு மாறியதும், முதல் நாள் முதல் ஆளாக அமைச்சர் செந்தில்பாலாஜி தான் கைது செய்யப்படுவார்” என்று, பாஜக தமிழக தலைவர்  அண்ணாமலை பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் அதிமுக தான் எதிர் கட்சி என்றாலும், பல விசயங்களிலும் பாஜக தான், தமிழ்நாட்டின் தற்போதைய எதிர் கட்சியைப் போல் செயல்பட்டு வருவதாக தொடர்ச்சியான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அந்த அளவுக்கு பாஜக தமிழ் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழக அரசை நேரடியாகவே எதிர்க்கத் தொடங்கி உள்ளார்.

இதற்கு உதாரணமாக நேற்று முன் தினம் மதுரை பழங்காநத்ததில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பாஜக தமிழ் மாநிலத் தலைவர் அண்ணாமலை, “உங்களால் முடிந்தால் ஆதீனத்தை தொட்டுப் பாருங்கள்.. பார்ப்போம்” என்று, தமிழக அரசுக்கு பகிரங்கமாக சவால் விடுத்தார். இந்த சம்பவம், தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியது.

அதன் தொடர்ச்சியாக, கோவை மசக்காளிப்பாளையத்தில் பாஜக அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. 
இந்த நிகழ்ச்சியில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் உள்ளிட்டோர் பலரும் கலந்துகொண்டனர். இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “டெல்லியில் ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜரானதற்கு தேவையில்லாத போராட்டத்தை காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள், தலைவர்கள் செய்து வருகிறார்கள்” என்று, குறிப்பிட்டார். 

“கேரளாவில் தங்கக் கடத்தலில் கைது செய்யப்பட்ட குற்றவாளி அம்மாநில முதலமைச்சர் மீது குற்றச்சாட்டை வைத்து உள்ளார் என்றும், ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி தலைவர் இது குறித்து வாய் திறக்கவில்லை என்றும், இது தொடர்பாக தமிழக முதலமைச்சரும் பேசவில்லை” என்றும், அவர் விமர்சனம் செய்தார். 

அத்துடன், “டெல்லியில் மக்களுக்கு இடையூறு செய்வது போன்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்” என்றும், அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், “திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 21 பாஜகவினரை தமிழக அரசு வழக்கு பதிந்து கைது செய்து உள்ளது என்றும், தமிழகத்தில் காவல்துறை ஏவல்துறையாக உள்ளது” என்றும், விமர்சனம் செய்தார்.

“அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை வழங்க உள்ளது என்றும், கூறினார். உத்தரப் பிரதேசம் போன்று தமிழ்நாடு காவல்துறையில் பணிக்கு ஆள் சேர்ப்பதில் அக்னி வீரர் திட்டத்தை கொண்டுவர வேண்டும்” என்றும், கேட்டுக்கொண்டார்.

“தமிழக மின்சார வாரியத்தின் மின் திட்ட ஒப்பந்தம் அனைத்து விதிகளையும் மீறி பி.ஜி.ஆர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது என்றும், எங்களிடம் உள்ள ஆதாரத்தில் இருந்து மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தப்பிக்கவே முடியாது” என்றும், மிக காட்டமாகவே பேசினார். 

குறிப்பாக, தற்போதுள்ள திமுக அரசு மாறும் போது, முதல் நாள் முதல் ஆளாக செந்தில்பாலாஜி கைது செய்யப்படுவார்” என்றும், அண்ணாமலை எச்சரிக்கை விடுக்கும் தோரணையில் பேசினார்.

முக்கியமாக, “அதிமுக உட்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிட்டது இல்லை என்றும், இனியும் தலையிடப் போவதும் இல்லை” என்றும், அவர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, “திமுக ஆட்சி மாறியதும், முதல் நாள் முதல் நபராக அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்படுவார்” என்று, அண்ணாமலை
எச்சரிக்கும் விதமாக பேசி உள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.