அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவை புகழ்வது போல், பாஜக வழக்கறிஞர் எச்சரிக்கை விடுக்கும் வகையில் மிரட்டும் ஆடியோ ஒன்று,  இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

அதாவது, அதிமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் தற்போதைய அமைப்பு செயலாளருமான பொன்னையன் பாஜகவுக்கு எதிராக, கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

அதில், “அதிமுகவை அழித்து ஒழித்துவிட்டு பாஜக தமிழ்நாட்டில் வளரப் பார்க்கிறது” என்ற ஒரு குண்டை பெண்ணையன் தூக்கிப் போட்டார்.

அத்துடன், “பாஜக அதிமுகவின் கூட்டணி கட்சிதான் என்றாலும், அக்கட்சி தமிழகத்தில் வளர்வது அதிமுகவுக்கும், திராவிட கொள்கைகளுக்கும், தமிழக நலனுக்கும் நல்லதல்ல” என்றும், அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவை மிக கடுமையாகவே பொன்னையன் விமர்சித்தார்.

அதன் தொடர்ச்சியாகவே, அடுத்த சில நாட்களில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, “அதிமுகவை பாஜக விமர்சித்தால், நிச்சயம் நாங்கள் பதிலடி கொடுப்போம்” என்று, குறிப்பிட்டார்.

“மத்திய அரசிடம் பதவி பெற அண்ணாமலை அரசியல் செய்கிறார் என்றும், ஏற்கனவே பாஜக மாநில தலைவராக இருந்த தமிழிசை, எல்.முருகன் ஆகியோர் பதவி பெற்றத்தை போல், அண்ணாமலையும் தற்போது பதவி பெற நினைக்கிறார்” என்று, மிக கடுமையாக விமர்சனம் செய்தார்.

“அண்ணாமலையின் செயல்பாடுகள், மத்திய அரசு பதவியை குறி வைத்ததைப் போல் இருக்கிறது என்றும், அதிமுக தான் தற்போது எதிர்க்கட்சி” என்றும், சூடு பறக்க பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, “ஆயிரம் கிளைகளைக் கொண்டு செயல்படும் கட்சி அதிமுக என்றும், 10 ஆயிரம் பேரை திரட்டிவிட்டார்கள் என்பதை வைத்து எதிர்க்கட்சி என கூற முடியாது” என்றும், பாஜகவிற்கு தக்க பதிலடி கொடுத்தார். 

குறிப்பாக, “பாஜகவிற்கு கூடுவது காக்கா கூட்டம் என்றும், அதிமுகவுக்கு கூடுவது கொள்கை கூட்டம்” என்றும், பாஜகவை மிக கடுமையாகவே அவர் விமர்சனம் செய்தார்.

“கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் தயார் என்றால், அதிமுகவும் தனித்து போட்டியிட தயாராக உள்ளதாகவும்” பாஜகவிற்கு அவர் சவால் விடும் வகையில் உறக்க பேசினார். 

முக்கியமாக, “வி.பி.துரைசாமி எல்லாம் அதிமுகவை பற்றி பேசலாமா?” என்று, விமர்சித்த செல்லூர் ராஜு, “இதைவிட ஒரு கொடுமை நாட்டில் வேறு எதுவுமே இல்லை” என்றும், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மிகவும் நொந்துகொண்டார்.

இந்த நிலையில் தான், “பாஜகவினரை காக்கா கூட்டம்” என்று விமர்சித்ததற்காக, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் போனில் பேசிய பாஜக வழக்கறிஞர் ஒருவர், அவரை புகழ்வதைபோல் எச்சரிக்கும் ஆடியோ ஒன்று தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அதன்படி, தூத்துக்குடி மாவட்ட பாஜக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்குமார், செல்லூர் ராஜுவுக்கு போன் செய்து “ஹலோ, செல்லூர் ராஜூ அண்ணனா” என்று கேட்க, அதற்கு அவர் “ஆமாம்” என்கிறார்.

அப்போது, “அண்ணே வணக்கம், நான் சுரேஷ்குமார் பேசுகிறேன். அண்ணனுடைய பேட்டி பார்த்தேன். அதில் அவங்க தூணை போட்டால், நாங்கள் துரும்பா போட்டிருவோம் என்று கூறியிருந்தீர்கள். உண்மையில் அது பெரிய இதுனே.. 

நல்லா இருந்ததுனே என்று கூறிவிட்டு, 'அண்ணே ஏற்கனவே மீனாட்சி அம்மன் கோவில்ல திருநீர் ஏதோ விற்றுக் கொண்டு இருந்தீர்களோ?' என்று கேட்க, 'திருநீர் கடை இல்லை, பிரசாத கடை கொஞ்ச நாள்' ” என்று, அவரும் பதில் அளிக்கிறார்.

தொடர்ந்து பேசிய சுரேஷ்குமார், “அண்ணாமலை ஒரு ஐபிஎஸ் அதிகாரி சரியாண்ணே, நீங்க ஒரு 3 ஆம் வகுப்பு படித்த ஒரு ஆள். நீங்க என்னவெல்லாம் சாதனை பண்ணீங்க.. என்னெல்லாம் செய்தீங்க என்பது எல்லாம் தெரியும். தெர்மகோல் விட்டு தமிழகத்தை அலற விட்டீங்க, நீங்கள் அவ்வளவு பெரிய விஞ்ஞானி சரியாண்ணே..” என்று புகழ்வது போல் எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசினார்.

இப்படி, சுரேஷ்குமார் பேசியதை அப்படியே கோபப்படாமல் செல்லூர் ராஜு அமைதியாக கேட்கும், இந்த ஆடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

இந்த ஆடியோ, தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதிமுக - பாஜக இடையே பேசும் பொருளமாகவும் மாறி உள்ளது.